போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்!

பம்மல் கே சம்பந்தம் படத்துல கமல் கல்யாணம் ங்கற வார்த்தையைக் கேட்டாலே ‘உவ்வே’ ன்னு எதுக்கு குமட்டிக்கிட்டு வாந்தி எடுத்தார்னு ஒருநாள் மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்து சிந்தனை பண்ணிப்பார்த்தேன்.

கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் னு இந்த கெழங்கட்டையெல்லாம் அடிக்கடி சொல்லுதுங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டவனோட நெலமையோ ஒரு வாரத்து தயிர் மாதிரி ரொம்ப நாறிப்போயிடுதுங்க.

அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மாதிரி கலகலப்பாய் போய்க்கிட்டு இருக்கிற பிரம்மச்சாரியோட வாழ்க்கை கல்யாணத்துக்கு அப்புறம் மெகாதொடர் சீரியல் மாதிரி ஒரே சோகமாயிடுதுங்க.

‘வீட்டைக் கட்டிப்பாரு. கல்யாணம் பண்ணிப்பாரு.’ ன்ற பழமொழியை அனுபவிச்சி முதல்ல சொன்னவன் என்ன பாடுபட்டிருப்பான்னு கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.

கல்யாணம் பண்றதுக்குள்ள எத்தனை சடங்கு, சம்பிரதாயம்!

முதல்ல பொண்ணு தேடுற படலம்.

கேசரி,ஜாங்கிரி இப்படிப்பட்ட இனிப்புப் பண்டங்களுக்கு அடிமையான பசங்களை நண்பனா கூட்டிக்கிட்டு பொண்ணு பார்க்கப்போறவன் இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ண முடியாது. பொண்ணு எல்லாருக்கும் பிடிச்சிப்போயி இருந்தாலும் பொண்ணு தேடுற படலம் முடிஞ்சு போயிடுச்சின்னா அப்புறம் திங்கிறதுக்கு சுவீட் கிடைக்காதேங்கற பதட்டத்துல ஏதாவது குறையைக் கிளப்பி விட்டுட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை துண்டை உதறி தோள்ல போட்டுகிட்டு ‘அப்புறம் சொல்லி அனுப்புறோம்’ னு கிளம்ப வெச்சிடுவானுங்க.

பொண்ணு நல்லா லட்சணமா இருந்தாலும் அடுத்தபடியா திங்கறதுக்கு பட்சணம் கிடைக்காதேங்கற எண்ணத்துல மாப்பிள்ளைக்காரப் பயல் கிட்ட ‘டேய்! பொண்ணோட மூக்கு அருவா மாதிரி வளைஞ்சு இருக்குடா’ ன்னு உசுப்பேத்தி விட்டுட்டு அந்த பொண்ணை பிடிக்கலன்னு சொல்ல வெச்சிடுவானுங்க.

சுவீட் முட்டை போடுற வாத்தை யாராவது கொல்ல நினைப்பாங்களா?.

இப்படி அடுத்தவனுக்குப் பொண்ணு பார்க்கப் போயே தன்னோட சுவீட் தாகத்தை தீர்த்துக்குவானுங்க.

ஒருவழியா நண்பர்களோட சதித்திட்டங்களையும் முறியடிச்சிட்டு பொண்ணு புடிச்சிப்போயிடுச்சின்னா அடுத்ததா நிச்சயதார்த்தம்னு ஒண்ணு பண்ணுவாங்க.

தட்டுல பழம், வெத்தலை பாக்கு இதெல்லாம் வெச்சி பொண்ணோட அப்பனும் மாப்பிளையோட அப்பனும் மாத்தி மாத்தி கொடுத்துக்குவானுங்க. என்னய்யா விளையாடறீங்களா?

அவங்க அவங்க வாங்குன ஆரஞ்சுப் பழத்தை அவனவன் உரிச்சித் தின்னுக்க வேண்டியதுதானே? எதுக்கு வாங்குன பழத்தை மாத்தி மாத்தி கொடுத்துக்கணும்?. என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இருக்கு?

நிச்சயதார்த்தமும் முடிஞ்சி அப்புறம் கண்ணாலம்.

கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி மாப்பிள்ளை நேரா ஊர்ல இருக்கிற ஏதாவது ஒரு பியூட்டி பார்லருக்குப்போயி ஷேவ் பண்ணி முடி வெட்டிக்குவான். பியூட்டி பார்லர் காரன் மாப்பிள்ளை கிட்ட ‘ஃபேசியல் பண்ணிக்குங்க. அப்பத்தான் நாளைக்கு மூஞ்சி பளபளன்னு இருக்கும்’ னு சொல்லி உசுப்பேத்தி விடுவான். கருவாப் பயலாட்டம் இருக்கிற நம்ம மாப்பிள்ளைப் பயலோட மூஞ்சியில சேறு மாதிரி எதையோ குழப்பி அப்பிவிட்டு காய வைப்பான்.காய்ஞ்சுகிட்டு இருக்கிற அந்த கொஞ்ச நேரத்துல நம்ம மாப்பிள்ளைப்பய கண்ணை மூடிக்கிட்டு கற்பனையில காஷ்மீர் மாதிரி குளுகுளு பிரதேசத்துக்கு பறந்துபோயி அந்த பொண்ணு கூட ஒரு குத்தாட்டம் போட்டு முடிச்சிடுவான். அரை மணிநேரம் கழிச்சி மூஞ்சிய கழுவிப்பார்த்தா கரிச்சட்டியில சுண்ணாம்பு அடிச்சது மாதிரி மூஞ்சி வெள்ளையா இருக்கும்.

கல்யாணப்பொண்ணு என்ன பண்ணுவா தெரியுமா? அவளோட வீட்டுக்கொல்லைப்புறத்தில இருந்த மருதாணி மரத்துல உள்ள எல்லா இலையையும் உருவிப்போட்டு அம்மியில வெச்சி அரைச்சு கை கால் விரல்ல எல்லாம் சாணி அப்புன மாதிரி அப்பிகிட்டு ‘அன்னக்கிளி உன்னத்தேடுது’ ன்னு டூயட் பாடிக்கிட்டு தூங்காம விடிய விடிய உக்கார்ந்து கெடக்கும்.

மறுநாள் கல்யாணம்…

விடிஞ்சதும் கல்யாண மண்டபத்துக்கு சொந்தக்காரனுங்க ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுடுவானுங்க.

ரொம்ப தூரத்திலே இருந்து வந்த ஆளுங்க அதது ஒரு மூலையில உட்கார்ந்துகிட்டு தூங்க ஆரம்பிச்சிடுவானுங்க.

அந்த நேரத்துல மண்டபத்துக்கு வந்து சேரும் வித்துவானுங்க வாயில நாதஸ்வரத்தை வெச்சி ஊதி, ரெண்டு கையாலயும் தவிலை அடிச்சி தூங்கிகிட்டு இருக்கிற கூட்டத்தையெல்லாம் எழுப்பி விட்ருவாய்ங்க. வாரிச்சுருட்டிகிட்டு எழுந்திருக்கிற சொந்தக்காரனுங்க வாயில வெத்தல சீவல் போட்டுகிட்டு கல்யாணத்தை கவனிக்க ஆரம்பிச்சிடுவானுங்க.

அப்புறம் பொண்ணு மாப்பிள்ளைய வரவழைச்சி இந்த அய்யரு அவங்க ரெண்டு பேரையும் செக்குமாடு மாதிரி மணமேடையை சுத்தி வரச்சொல்லி டயர்டாக்கிடுவாரு.அப்புறம் பொண்ணு மாப்பிள்ளைய மணமேடையில உட்கார வைப்பாங்க. அய்யரு எதிரில இருக்கிற அடுப்பை பற்ற வெச்சி காய்ஞ்ச குச்சியெல்லாம் அதுல பொறுக்கிப்போட்டு புகைமூட்டத்தைக் கிளப்பி விடுவாரு.

அடுப்பு அனல் பட்டு வியர்வையில மாப்பிள்ளை பொண்ணோட மேக்கப் எல்லாம் கலைஞ்சி போய் ரெண்டுபேரும் வெயில் நேரத்துல மணல் திட்டுல சிக்குன அகதிகள் மாதிரி ஆயிடுவாங்க.

புகை மூட்டம் கிளம்பி அய்யரோட மூக்குக்குள்ள போயி தும்மலை கௌப்பி விடும். தும்மினா சுத்தி உட்கார்ந்து இருக்கிறவனுங்க கொந்தளிச்சிடுவானுங்கங்கற பதட்டத்துல அய்யரு ‘கெட்டி மேளம். கெட்டி மேளம்’ன்னு கத்தி வித்துவான்களை உசுப்பி விட்ருவாரு. வித்துவானுங்களும் தடார் புடார் னு அடிச்சி இன்னும் அதிகமா சத்தத்தை கௌப்புவாய்ங்க. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திகிட்டு அய்யரு வாய்க்குள்ள லாக் ஆன தும்மலை யாருக்கும் தெரியாம ரிலீஸ் பண்ணி விட்ருவாரு.

மாப்பிள்ளை தாலியை எடுத்து பொண்ணு கழுத்துல ஒரு முடிச்சி போடுவான். ஆசையா அடுத்த முடிச்சி போடறதுக்குள்ள சுத்தி நிக்கிற சொந்தக்கார பொம்பளைங்க அவனோட கையிலேயிருந்து தாலியை வெடுக்குன்னு பிடுங்கி அவங்களே மீதி ரெண்டு முடிச்சையும் போட்டுவிட்ருவாங்க.

அந்த உச்சகட்ட நேரத்துல ஃபோட்டோகிராபரு மல்லாக்கப் படுத்துகிட்டும், தலைகீழா தொங்கிகிட்டும் பல ஆங்கிள் ல போட்டோக்கள் எடுத்துத்தள்ளுவான்.

உடனே சுத்தி இருக்கிற ஜனங்கள் எல்லாம் தன்னோட கையில இருக்கிற அரிசியை மாப்பிள்ளை, பொண்ணோட மூஞ்சியில வேகமா தூக்கி எறிஞ்சி ஆசிர்வாதம் பண்ணுவாங்க. தூக்கி எறிஞ்ச அரிசியில முக்கால்வாசி அந்த அய்யரோட உச்சந் தலையில போய் உட்கார்ந்துக்கும்.

ஆசிர்வாதம் பண்ணுன கையோட உடனே எழுந்திருச்சி ஜனங்கள் எல்லாம் பந்தி நடக்கிற இடத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பிச்சுடும்.

மாப்பிள்ளையும் பொண்ணும் டயர்டாயி போய் ‘உஷ். அப்பாடா’ ன்னு மணமேடையில உட்காருவாங்க. அந்த நேரத்துலதான் நண்பனுங்க எல்லாம் அட்டைப்பெட்டி மேல கலர் பேப்பரை சுத்திகிட்டு வந்து ‘மச்சி வாழ்த்துக்கள் டா’ ன்னு சொல்லி, மாப்பிள்ளை பொண்ணை எழுப்பிவிட்டு, கையில கிப்ட் கொடுத்துட்டு 32 பல்லும் தெரியறமாதிரி சிரிச்சிகிட்டு குரூப் போட்டோ எடுத்துக்குவானுங்க.

கொஞ்சநேரத்துல சொந்தக்காரனுங்க எல்லாம் பந்தியில குந்தி தின்னு முடிச்சிட்டு மொய் எழுதிட்டு சொந்த ஊருக்குக் கௌம்பிடுவானுங்க.

தனியா உட்காரந்து கிடக்கிற பொண்ணு மாப்பிள்ளைக்கு பசியெடுக்க ஆரம்பிச்சிடும். ரெண்டுபேரும் பந்தி நடக்குற இடத்தையே ஏக்கமா அடிக்கடி எட்டிப் பார்த்துகிட்டு உட்கார்ந்து கிடக்கும்.

சாயங்காலம் நாலு மணிக்கு வந்து யாராவது ரெண்டுபேரையும் பந்திக்கு கூட்டிகிட்டுப்போய் மிச்சம் மீதி இருக்கிறதை இலையில வெச்சி சாப்பிட வெப்பாங்க.

அப்புறம் எல்லாரும் பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பிடுவாய்ங்க.

அப்புறம் கொஞ்சநாளு மாப்பிள்ளையும் பொண்ணும் குஜாலா கூத்தடிச்சி கொண்டாடுவாங்க.

மோகம் முப்பது நாளு. ஆசை அறுபது நாளு. மொத்தம் தொண்ணுறு நாளு கழிச்சி ரெண்டுபேரும் சம்பாதிச்சி குடும்பம் நடத்த திண்டாடுவாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி குழந்தை குட்டிகள். அப்புறம் அதை வளர்த்து… படிக்க வெச்சி… கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு வரன் தேடி அலைவாங்க..

முதல்ல பொண்ணு பார்க்கிற படலம்…

அய்யய்யோ. தேய்ஞ்சி போன சி.டி மாதிரி திரும்பவும் மொதல்லே இருந்தா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்……..

Advertisements

வாழ்க்கையிலே வழுக்கி விழுவோம்!

‘வாழ்க்கையில வழுக்கி விழுந்த ஒரு பெண்ணுக்கு நான் வாழ்க்கை கொடுக்கப்போறேன்’ என்றான் என் நண்பன் சக்கரை. (எத்தனை ‘ழ’?).

‘ஏண்டா. வாழ்க்கையில எல்லாருமே எப்பவாவது வழுக்கி விழுறது சகஜம் தானேடா. காலையில கூட நான் தின்னுட்டு தூக்கிப்போட்ட வாழைப்பழத்து தோலுல காலை வெச்சி நானே வழுக்கி விழுந்துட்டேன். வழுக்கி விழுறது ஒரு குத்தமாடா.?’ என்றேன் சக்கரையிடம்.

என்னைப்பொறுத்தவரை வழுக்கி விழுவதைக்காட்டிலும் மகிழ்ச்சியான ஒரு விசயம் இந்த உலகத்தில் வேறு கிடையாதுங்க.

ஒருநாள், பேருந்து நிறுத்தத்தில் கூட்டமாக அனைவரும் பேருந்தை எதிர்பார்த்து மிகவும் பதட்டத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு சிலர் வீட்டில் மனைவியிடம் திட்டு வாங்கிய சோகத்தில் இருந்தனர். இன்னும் சிலர் தாமதமானால் ‘வள்’லென்று குறைக்கும் மேனேஜர் பற்றிய பயத்தில் நின்று கொண்டிருந்தனர். ஒரு சில வாலிப வயோதிக கிழட்டு அம்மணிகள் தான் போட்ட மேக்கப் வியர்வையில் கலைந்து எங்கே தனது உண்மையான வயதை அடையாளம் காட்டிவிடுமோ என்ற அச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.

இப்படி அனைவரும் பதட்டத்துடனும் சோகத்துடனும் நின்றுகொண்டிருந்த போது பேருந்து வந்து நின்றது. பயணிகள் அனைவரும் சோக களையுடன் பேருந்தில் ஏற ஆரம்பித்தனர்.
பேருந்து புறப்பட ஆரம்பித்ததும் ஒரு கல்லூரி மாணவன் ஓடி வந்து ஏறுவதற்காக பேருந்தை துரத்தி வந்தான். அப்போது கீழே கிடந்த தர்பூசணி பழத்தில் கால் வைத்து விட்டான். சாலையில் வழுக்கிக்கொண்டே ஸ்கேட்டிங் பயணம் செய்து பேருந்து செல்வதற்கு முன்பாகவே அடுத்த பேருந்து நிறுத்தத்தை அடைந்து அங்கு நடுசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தில் மோதி முகத்தில் ரத்தஆறு வழிய கீழே விழுந்தான்.

இதைப்பார்த்த பேருந்து பயணிகள் அனைவரும் தங்கள் சோகத்தினை மறந்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

ஏன் இப்படி ஒருவர் வழுக்கி விழும்போது அதைப்பார்க்கும் அனைவரும் கைகொட்டி சிரிக்கின்றனர் என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.

அப்படி வழுக்கி விழும் நபர் எழுந்து நின்று தனக்கு எங்கே அடிபட்டது என்று பார்க்காமல் தன்னை யாராவது பார்த்து விட்டார்களா என்ற பயத்தில் சுற்றும் முற்றும் ஏன் பதட்டத்துடன் பார்க்கிறார் என்பதும் எனக்குப் புரிய வில்லை.

உண்மையில் வழுக்கி விழுந்ததற்காக அந்த நபர் முதலில் பெருமைப்பட வேண்டும்.

ஏனெனில் ஒருவர் வழுக்கி விழும்போது அங்கு நின்றுகொண்டிருக்கும் அனைவரையும் சோகத்தினை மறந்து சிரிக்க வைத்து விடுகிறார். ஆனால் உள்காயமாக அடி பட்டதினால் அவர் சோகமாகி விடுகின்றார். எனவே சுற்றியிருக்கும் அனைவரையும் சிரிக்க வைத்த அவருக்கு சிரித்த அனைவரும் சேர்ந்து ஏதாவது ஆறுதல் பரிசு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

வழுக்கி விழுவதினால் ஏற்படும் பயன்கள்:

1.சுற்றியிருக்கும் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விடுகிறோம்.

2.ஓசியில் சோடா கிடைக்க வாய்ப்பு உண்டு.

3.அதுவரை நம்மை ஏறெடுத்தும் பார்க்காத ஃபிகரும் நம்மை திரும்பிப்பார்த்து சிரிப்பாள்.

4.’பார்த்து நடக்கக் கூடாதா?’ என்ற பெருசுகளின் இலவச ஆலோசனைகள் கிடைக்கும்.

5.கதகளி மற்றும் குச்சிப்புடி போன்ற நடனங்களை நடுரோட்டில் ஆடி பழகுகிறோம்.

வழுக்கி விழ பயன்படும் பொருட்கள்:

1. வாழைப்பழத் தோல்.
2. தர்ப்பூசணி (அரைத் துண்டு).
3. சேறு.
4. தடைக்கற்கள்.
5. புல்.

வழுக்கி விழுவதில் பலவகைகள் உண்டு.அவையாவன:

1.மல்லாக்க வழுக்கி விழுதல்
2.குப்புற விழுதல்
3.ஒருக்களித்து விழுதல்

1.மல்லாக்க வழுக்கி விழுதல்

இவ்வகை பெரும்பாலும் வாழைப்பழத்தோலினாலேயே நிகழ்த்தப்படுகிறது.
வாழைப்பழத்தில் கால் வைத்தவுடன் ஸ்கேட்டிங் பயணத்தினை தொடங்கும் நபர் பின்னர் சிறிது தூரம் பயணித்ததும் வண்டியில்(தோலில்) பெட்ரோல்(வழுவழப்பு) தீர்ந்து விடும் சமயத்தில் தனது பயணத்தினை நிறுத்திவிட்டு மல்லாக்க சாய்ந்து தரையில் விழுந்து ஓய்வெடுக்க ஆரம்பித்து விடுவார்.

2.குப்புற விழுதல்

இவ்வகை பெரும்பாலும் தடைக்கற்களினாலும் உடல் மெலிந்தவர்களுக்கு புற்களினாலும் ஏற்படுகின்றது. அதனாலேயே ஈர்க்குச்சி போன்ற உடல் மெலிந்து காணப்படுபரை ‘புல் தடுக்கி பயில்வான்’ என நாம் அழைக்கிறோம். அதாவது புல் தடுக்கினாலே கீழே விழுந்து விடும் அளவிற்கு உடல் பலவீனமானவர் என்பது பொருளாகும்.

இவ்வகையில் வழுக்கிவிழும் நபர் ரிவர்ஸ் கியரில் சிறிது தூரம் பின்னோக்கி பயணம் செய்த பின்னரே கீழே விழுந்து தனது இலக்கை அடைகிறார்.

3.ஒருக்களித்து விழுதல்

இவ்வகையானது மது போதைகளினால் ஏற்படுகிறது. இவ்வகையில் வழுக்கி விழுபவர் காலைத்தடுக்கி விழச் செய்வதற்கு எந்தவகை பொருளும் கீழே கிடக்கா விட்டாலும் தனது சொந்தமுயற்சியினாலேயே ஒருக்களித்து விழுந்து ஓய்வெடுக்க தொடங்குகிறார்.

இவ்வளவு பெருமைகள் நிறைந்ததாக வழுக்கல் எனும் செயல் திகழ்கிறது.

எனவே,

வாழ்க்கையில் வழுக்கி விழுவோம்! அதைப் பார்ப்பவர் மகிழ்ச்சி அடைவோம்!!

வெளியிடுவோர்:

வாழ்க்கையில் வழுக்கி விழுவோர் நலச்சங்கம்.

பின்குறிப்பு:

இவ்வாறாக வாழ்க்கையில் வழுக்கி விழுந்து மற்றவர்களை மகிழ வைத்த எமது சங்கத்தின் உறுப்பினர் பலர் மூக்கு உடைந்தும் பற்கள் விழுந்தும் கைகால்களில் மாவுக்கட்டுப்போட்ட படியும் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் ஓய்வெடுத்து வருகின்றனர். அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கும் ஹார்லிக்ஸ் பாட்டில் செலவிற்கும் நிதியுதவி தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கட்டுரை பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை

 தமிழ் வினாத்தாள்களில் கட்டுரை  வரைக என பல தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும்.

இதற்கு நிறைய மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதால் இவை மாணவர்களின் தலையெழுத்தை மாற்றி விடும் அபாயம் உண்டு.

எனது நண்பன் அசோகன் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பற்றி கீழ்க்கண்டவாறு கட்டுரை எழுதினான்:

மாமல்லபுரத்துச் சிற்பங்கள் மாமல்லபுரத்தில் உள்ளன.
அவை கருங்கல்லினால் ஆனவை.
உளி வைத்துச்செதுக்கப்பட்டவை.
கொத்தனாரால் கட்டப்பட்;டவை என கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இவனது விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கோபத்தில் மைனஸ் நூறு மதிப்பெண்கள் போட்டு விட்டார். இதனால் தேர்வில் தோல்வி அடைந்த அசோகன் மாமல்லபுரத்தில் உள்ள தனது மாமா வைத்திருக்கும் டீ கடையில் வேலை செய்வதாக சமீபத்தில் கேள்விப் பட்டேன்.
கோவிந்தசாமி கடல் சிங்கங்கள் பற்றிய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தான்:

கடல் சிங்கங்கள் கடலில் குட்டி போட்டு காட்டில் இடம்பெயர்ந்து  கூட்டமாக வாழும்.

தங்கதுரை முப்பால் பற்றிய கட்டுரையில் இவ்வாறு எழுதினான்:

பால் மூன்று வகைப்படும். அவையாவன:

1. ஆட்டுப்பால்
2. மாட்டுப்பால்
3. நாய்ப்பால்.

ஆட்டுப்பால் காய்ச்ச வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். மாட்டுப்பால் சுட வைத்து குடிக்க வேண்டும். நாய்ப்பால் உடலுக்கு தீங்கானது. ஆடடுப்பால் குடித்தால் இறைப்பு வரும். நாய்ப்பால் குடித்தால் குறைப்பு வரும்.

இப்படியாக கட்டுரையில் கட்டுக்கதைகள் எழுதியவர்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதலாம்.

காந்தி பற்றி கட்டுரை வரைக.
இப்படி ஒரு கேள்வி  நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது தமிழ் ஆண்டுத்தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிந்தது.
பதற்றத்தில் காந்தி என்பதை தொந்தி என தவறாக புரிந்து கொண்டு நான் கீழ்க்கண்டவாறு எழுதித் தொலைத்து விட்டேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால் என் பின்னால் அமர்ந்து தேர்வு எழுதிய எனது நண்பன் குண்டு சவுரி எனது இந்த கட்டுரையை அப்படியே காப்பி அடித்து மாட்டிக்கொண்டான்.
தொந்தி – ஒரு ஆய்வு கட்டுரை
காயமே இது பொய்யடா
இது வெறும் காற்றடைத்த பையடா

இது யாரோ ஒரு சினிமா பாடலாசிரியர் எழுதிய பாடல் அல்ல.இந்த அற்புத வரிகள் ஒரு சித்தரின் சிந்தனையில் உருவானவை.

காயம் என்றால் உடல் என்று பொருள்.

பழங்கால சித்த வைத்தியர் மந்திவாயனார் தனது ஒலைச்சுவடியில் இப்படி   குறிப்பிடுகிறார்:

காயத்தில் காயம் ஏற்படின்
காயத்தில் காயத்தை வைத்து கட்டு.

அதாவது

காயத்தில்(உடலில்)
காயம்(புண்) ஏற்படின்
காயத்தில்(புண்ணில்)
காயத்தை(பெருங்காயத்தை) வைத்து கட்டு.
 என்பது பொருள்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நம் உடலில் உள்ள பாகங்களில் மிகவும் அழகானது எது என்று கேட்டால் அனைவரும் உடனே சொல்வது நமது முகம் என்று.சிலர் கண்கள் என்பர்

உண்மையிலேயே நமது மேனி அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது எது தெரியுமா? நிச்சயமாக நமது தொந்திதான். ஏன் ஆச்சரியமாக இருக்கிறதா?

ஒரு பழமொழி உண்டு.

 எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்று.

சிரசு என்றால் தலை என்று பொருள்.

இது மிகவும் தவறான பழமொழியாகும்.

உண்மை என்னவெனில்

எண்சான் உடம்பிற்கு தொந்தியே பிரதானமாகும்.

இதனை ஒரு சிறிய ஆய்வின் மூலம் நீங்கள் அறியலாம்.

1. ஓரு அறையில் சுவரின் முன்னால் நிற்கவும்

2. முதலில் நீங்கள் நேராக நிற்கவும்.

3. கண்ணை மூடிக்கொள்ளவும்.

4. அப்படியே மெதுவாக நடந்து செல்லவும்.

5. சிறிது தூரம் நடந்து சென்றவுடன் சுவரில் மோதி நிற்பீர்கள்.

6. அப்படியே மெதுவாக கண்களை திறந்து பார்க்கவும்.

7. உங்கள் உடலின் எந்த பாகம் சுவரில் மோதி நிற்கிறது?

நிச்சமாக தொந்தியாகத்தான் இருக்கும்.

நமது கடவுள்களில் மிகவும் அழகானவர் தொந்தியுடைய பிள்ளையார்தான். நமது நாடு மட்டுமல்ல. வெளிநாட்டினரின் மனதை கொள்ளை கொண்டதும் பிள்ளையாரின் உருவம்தான். அதனாலேயே பல பிள்ளையார் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்படுகின்றன.
 காரணம் அவரது அழகான தொந்தி.

இந்திய மாநிலங்களில் மிகப்பெரியது மத்தியபிரதேசம் என்பதை அனைவரும் அறிவோம். அதுபோலவே நமது உடலின் மத்தியப்பிரதேசமான தொந்தியே உடலின் மிகப்பெரிய பாகமாகும்.

பந்திக்கு முந்திக்கொள்
தொந்தியை வளர்த்துக்கொள்.

பந்தியில்
குந்தி தின்றால்
தொந்தி வளரும்.

போன்ற பழமொழிகள் நமது முன்னோர்கள் தொந்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பறை சாற்றும்.

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது.உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப்பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

 பாடலாசிரியர் வைரமுத்து கூட

நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர்; குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப்போலவே உருண்டை வடிவமானது.
இந்த வாழ்க்கையும் வட்டவடிவமானது.
 இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப்போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்

போற்றி வளர்ப்போம் ! கண்டதையும் போட்டு வளர்ப்போம் !!

ஜெய் தொந்தி!