வாழ்க்கையிலே வழுக்கி விழுவோம்!

‘வாழ்க்கையில வழுக்கி விழுந்த ஒரு பெண்ணுக்கு நான் வாழ்க்கை கொடுக்கப்போறேன்’ என்றான் என் நண்பன் சக்கரை. (எத்தனை ‘ழ’?).

‘ஏண்டா. வாழ்க்கையில எல்லாருமே எப்பவாவது வழுக்கி விழுறது சகஜம் தானேடா. காலையில கூட நான் தின்னுட்டு தூக்கிப்போட்ட வாழைப்பழத்து தோலுல காலை வெச்சி நானே வழுக்கி விழுந்துட்டேன். வழுக்கி விழுறது ஒரு குத்தமாடா.?’ என்றேன் சக்கரையிடம்.

என்னைப்பொறுத்தவரை வழுக்கி விழுவதைக்காட்டிலும் மகிழ்ச்சியான ஒரு விசயம் இந்த உலகத்தில் வேறு கிடையாதுங்க.

ஒருநாள், பேருந்து நிறுத்தத்தில் கூட்டமாக அனைவரும் பேருந்தை எதிர்பார்த்து மிகவும் பதட்டத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு சிலர் வீட்டில் மனைவியிடம் திட்டு வாங்கிய சோகத்தில் இருந்தனர். இன்னும் சிலர் தாமதமானால் ‘வள்’லென்று குறைக்கும் மேனேஜர் பற்றிய பயத்தில் நின்று கொண்டிருந்தனர். ஒரு சில வாலிப வயோதிக கிழட்டு அம்மணிகள் தான் போட்ட மேக்கப் வியர்வையில் கலைந்து எங்கே தனது உண்மையான வயதை அடையாளம் காட்டிவிடுமோ என்ற அச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.

இப்படி அனைவரும் பதட்டத்துடனும் சோகத்துடனும் நின்றுகொண்டிருந்த போது பேருந்து வந்து நின்றது. பயணிகள் அனைவரும் சோக களையுடன் பேருந்தில் ஏற ஆரம்பித்தனர்.
பேருந்து புறப்பட ஆரம்பித்ததும் ஒரு கல்லூரி மாணவன் ஓடி வந்து ஏறுவதற்காக பேருந்தை துரத்தி வந்தான். அப்போது கீழே கிடந்த தர்பூசணி பழத்தில் கால் வைத்து விட்டான். சாலையில் வழுக்கிக்கொண்டே ஸ்கேட்டிங் பயணம் செய்து பேருந்து செல்வதற்கு முன்பாகவே அடுத்த பேருந்து நிறுத்தத்தை அடைந்து அங்கு நடுசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தில் மோதி முகத்தில் ரத்தஆறு வழிய கீழே விழுந்தான்.

இதைப்பார்த்த பேருந்து பயணிகள் அனைவரும் தங்கள் சோகத்தினை மறந்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

ஏன் இப்படி ஒருவர் வழுக்கி விழும்போது அதைப்பார்க்கும் அனைவரும் கைகொட்டி சிரிக்கின்றனர் என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.

அப்படி வழுக்கி விழும் நபர் எழுந்து நின்று தனக்கு எங்கே அடிபட்டது என்று பார்க்காமல் தன்னை யாராவது பார்த்து விட்டார்களா என்ற பயத்தில் சுற்றும் முற்றும் ஏன் பதட்டத்துடன் பார்க்கிறார் என்பதும் எனக்குப் புரிய வில்லை.

உண்மையில் வழுக்கி விழுந்ததற்காக அந்த நபர் முதலில் பெருமைப்பட வேண்டும்.

ஏனெனில் ஒருவர் வழுக்கி விழும்போது அங்கு நின்றுகொண்டிருக்கும் அனைவரையும் சோகத்தினை மறந்து சிரிக்க வைத்து விடுகிறார். ஆனால் உள்காயமாக அடி பட்டதினால் அவர் சோகமாகி விடுகின்றார். எனவே சுற்றியிருக்கும் அனைவரையும் சிரிக்க வைத்த அவருக்கு சிரித்த அனைவரும் சேர்ந்து ஏதாவது ஆறுதல் பரிசு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

வழுக்கி விழுவதினால் ஏற்படும் பயன்கள்:

1.சுற்றியிருக்கும் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விடுகிறோம்.

2.ஓசியில் சோடா கிடைக்க வாய்ப்பு உண்டு.

3.அதுவரை நம்மை ஏறெடுத்தும் பார்க்காத ஃபிகரும் நம்மை திரும்பிப்பார்த்து சிரிப்பாள்.

4.’பார்த்து நடக்கக் கூடாதா?’ என்ற பெருசுகளின் இலவச ஆலோசனைகள் கிடைக்கும்.

5.கதகளி மற்றும் குச்சிப்புடி போன்ற நடனங்களை நடுரோட்டில் ஆடி பழகுகிறோம்.

வழுக்கி விழ பயன்படும் பொருட்கள்:

1. வாழைப்பழத் தோல்.
2. தர்ப்பூசணி (அரைத் துண்டு).
3. சேறு.
4. தடைக்கற்கள்.
5. புல்.

வழுக்கி விழுவதில் பலவகைகள் உண்டு.அவையாவன:

1.மல்லாக்க வழுக்கி விழுதல்
2.குப்புற விழுதல்
3.ஒருக்களித்து விழுதல்

1.மல்லாக்க வழுக்கி விழுதல்

இவ்வகை பெரும்பாலும் வாழைப்பழத்தோலினாலேயே நிகழ்த்தப்படுகிறது.
வாழைப்பழத்தில் கால் வைத்தவுடன் ஸ்கேட்டிங் பயணத்தினை தொடங்கும் நபர் பின்னர் சிறிது தூரம் பயணித்ததும் வண்டியில்(தோலில்) பெட்ரோல்(வழுவழப்பு) தீர்ந்து விடும் சமயத்தில் தனது பயணத்தினை நிறுத்திவிட்டு மல்லாக்க சாய்ந்து தரையில் விழுந்து ஓய்வெடுக்க ஆரம்பித்து விடுவார்.

2.குப்புற விழுதல்

இவ்வகை பெரும்பாலும் தடைக்கற்களினாலும் உடல் மெலிந்தவர்களுக்கு புற்களினாலும் ஏற்படுகின்றது. அதனாலேயே ஈர்க்குச்சி போன்ற உடல் மெலிந்து காணப்படுபரை ‘புல் தடுக்கி பயில்வான்’ என நாம் அழைக்கிறோம். அதாவது புல் தடுக்கினாலே கீழே விழுந்து விடும் அளவிற்கு உடல் பலவீனமானவர் என்பது பொருளாகும்.

இவ்வகையில் வழுக்கிவிழும் நபர் ரிவர்ஸ் கியரில் சிறிது தூரம் பின்னோக்கி பயணம் செய்த பின்னரே கீழே விழுந்து தனது இலக்கை அடைகிறார்.

3.ஒருக்களித்து விழுதல்

இவ்வகையானது மது போதைகளினால் ஏற்படுகிறது. இவ்வகையில் வழுக்கி விழுபவர் காலைத்தடுக்கி விழச் செய்வதற்கு எந்தவகை பொருளும் கீழே கிடக்கா விட்டாலும் தனது சொந்தமுயற்சியினாலேயே ஒருக்களித்து விழுந்து ஓய்வெடுக்க தொடங்குகிறார்.

இவ்வளவு பெருமைகள் நிறைந்ததாக வழுக்கல் எனும் செயல் திகழ்கிறது.

எனவே,

வாழ்க்கையில் வழுக்கி விழுவோம்! அதைப் பார்ப்பவர் மகிழ்ச்சி அடைவோம்!!

வெளியிடுவோர்:

வாழ்க்கையில் வழுக்கி விழுவோர் நலச்சங்கம்.

பின்குறிப்பு:

இவ்வாறாக வாழ்க்கையில் வழுக்கி விழுந்து மற்றவர்களை மகிழ வைத்த எமது சங்கத்தின் உறுப்பினர் பலர் மூக்கு உடைந்தும் பற்கள் விழுந்தும் கைகால்களில் மாவுக்கட்டுப்போட்ட படியும் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் ஓய்வெடுத்து வருகின்றனர். அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கும் ஹார்லிக்ஸ் பாட்டில் செலவிற்கும் நிதியுதவி தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: