மக்குநாட்டு மன்னர் மணிப்பயலார்

‘ராஜாதி ராஜ! ராஜ மார்த்தாண்ட! ராஜகம்பீர! மக்குநாட்டு மன்னர் மணிப்பயலார் வருகிறார்! பராக்! பராக்! பான் பராக்!’

குத்தீட்டியை செங்குத்தாக பிடித்தபடி அமைச்சரவையின் வாயிலில் நின்ற காவலாளி அடி வயிற்றிலிருந்து அலறினான்.

மன்னர் மணிபயலார் கம்பீரமாக நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

‘மந்திரி குண்டுசவுரியாரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?’

‘மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ தெரியாது மன்னா. ஆனால் மக்கள் உங்கள் மீது வசைமாரி பொழிகின்றனர்’

‘நீர் என்ன சொல்கிறீர் அமைச்சரே?’

‘ஆம் மன்னா! நான் நகரில் வலம் வந்துகொண்டிருந்தபோது நாய்கள் துரத்தியதால் ஒரு குடிசை வீட்டின் ஓரமாக ஒளிந்துகொண்டிருந்தபோது ஒட்டுகேட்டேன். நாட்டில் மழைபொழிகிறதா இல்லையா என்பது கூட தெரியாமல் மன்னர் என்ன அரண்மனையில் அமர்ந்து கொண்டு மகாராணியாருக்கு மாவு ஆட்டி கொடுத்து கொண்டு இருக்கிறாரா? என்று குடிசைக்குள் குந்தி இருந்த சிலர் தங்களை ஏளனமாக எள்ளி நகையாடினர் மன்னா.’

‘மக்களை விட்டுதொலையும் மந்திரியாரே! அவர்கள் எக்கேடோ கெட்டு ஒழியட்டும் விடு. அந்தப்புரத்தில் அழகிகள் அனைவரும் நலம்தானே?’

‘மன்னர் மன்னா! தாங்கள் அரண்மனையின் அறைகளில் ஒட்டடை அடிப்பது, அரசியாரின் துணிமணிகளை அள்ளிப்போட்டு துவைப்பது போன்ற சொந்த வேலைகள் செய்து சோர்வடைந்து போவதால் அந்தப்புரம் சென்று ஆண்டுகள் பல ஆகிவிட்டது. அங்கே அந்தப்புரத்து அழகிகள் எல்லாம் அதரப்பழசான கிழவிகள் ஆகிவிட்டனர். உறைக்குள்ளேயே கிடந்து துருப்பிடித்த தங்களது உடைவாள் போல அறைக்குள்ளேயே அடைந்துகிடந்து நரைபிடித்த தலையுடன் நடமாடுகிறார்கள் மன்னா. பேரன் பேத்திகளை கொஞ்ச வேண்டிய வயதில் ஃபேரன் லவ்லி எனும் ஒரு பசையை முகத்தில் பூசிக்கொண்டு கேரம் விளையாடி நேரம் போக்குகின்றனர்.கட்டையில் போக வேண்டிய வயதில் மட்டைப்பந்து விளையாடி கொட்டமடிக்கின்றனர். முகடுகள் போல் கூன்விழுந்த முதுகுடன் இருந்துகொண்டு உதடுகளில் சாயம் பூசி உலா வருகின்றனர் மன்னா.’

‘அப்படியா? வியப்பாக உள்ளதே! அப்படியானால் அவர்கள் அனைவரையும் விருப்ப ஓய்வு திட்டத்தின்கீழ் வீட்டிற்கு அனுப்பிவிடு. போக மறுத்து அடம்பிடிக்கும் பொக்கைவாய் கிழவிகளை அப்படியே அலாக்காக அலுங்காமல் தூக்கிக்கொண்டுபோய் இடுகாட்டில் குழிதோண்டி இன்றே புதைத்துவிடு.’

*****************************************************

“பாரி, ஓரி, காரி, அதியன், ஆய், நள்ளி, பேகன் ஆகிய கடையெழு வள்ளல்கள் போல நானும் ஏதாவது வாரி வழங்கி எட்டாவது வள்ளலாக எனது பெயரும் வரலாற்றில் இடம்பெற உள்ளம் கிடந்து துடிக்கிறது. அதற்கு ஏதாவது ஆலோசனை இருந்தால் தெரிவியுங்கள் அமைச்சர் பெருமக்களே!”

“வள்ளலாக ஆவது பற்றி அப்புறம் யோசிக்கலாம். முதலில் எங்களது மூன்று மாத சம்பள பாக்கியை முழுமையாக கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள் மன்னா”

*****************************************************

‘தளபதி உருண்டை உப்பிலியாரே! நமது நாட்டின் எல்லையோரத்தில் நேற்றிரவு முதல் கூடாரம் அடித்து தங்கியிருக்கும் நாடோடிகள் பெரிய பெரிய இரும்புக் குழாய்களை தங்களோடு கொண்டு வந்துள்ளனரே! அதில் புட்டு சுட்டு நமது நாட்டில் விற்று துட்டு சம்பாதிப்பதற்காகவா?’

‘மன்னா! அவர்கள் நாடோடிகள் அல்ல. அவர்கள் எதிரி நாட்டு படை வீரர்கள். நமது நாட்டின் மீது படையெடுப்பதற்காக பதுங்கியுள்ளனர். அந்த இரும்புக்குழாய்கள் அரிசிமாவைக் கொட்டி அடுப்பில் வேகவைத்து புட்டு சுடும் குழாய்கள் அல்ல. அதில் வெடிமருந்தை கொட்டி பற்றவைத்தால் நமது நாட்டினை பஸ்பம் ஆக்கிவிடும் பீரங்கி எனும் பிரம்மாண்ட ஆயுதங்கள் மன்னா!’

‘ஆ! ஆபத்து! தளபதியாரே! உடனே வெள்ளைக்கொடிகளை தயார் செய்யுங்கள்!’

*****************************************************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: