போனாகானா முதலியாரின் தேசபக்தி

(அமரர் கல்கி எழுதிய சிறுகதைகள் சிலவற்றை படித்தவுடன் நானும் சிறுகதை எழுதிப்பார்த்துவிடுவது என முடிவு செய்து பேனாவை எடுத்து தாளில் கிறுக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு நீங்கள் படிக்கும் இந்த சிறுகதை!)

போனாகானா முதலியாரின் தேசபக்தி – சிறுகதை

(எழுதியவர் குமரர் குல்பி)

போனாகானா முதலியாருக்குச்சொந்தமான ‘சப்பாணி டாக்கீஸ்’ ஸினிமா கொட்டகை ஒரு காலத்தில் ரொம்ப பேமஸாயிருந்தது. சாயங்காலம் ஆறு மணி ஆகிவிட்டால் போதும். வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் கிராமவாசிகள் தங்களது வேலைகளை அப்படியே போட்டு விட்டு கொட்டகையை நோக்கி தலைதெறிக்க ஓடி வருவார்கள்.

(நிற்க. போனாகானா முதலியாரின் பெயர்க்காரணத்தை இங்கு நான் சொல்லவேண்டியுள்ளது. அவரது உண்மையான பெயர் இதை விடக்கேவலமானது என்பதால் அப்பெயரை உங்களுக்கு நான் சொல்லப்போவதில்லை.

போனாகானா என்பதன் முழுப்பெயர் பொட்டுக்கடலை என்பதாகும்.

ஒரு நாள் முதலியாரின் மனையாள் இவரை சட்னி அரைப்பதற்கு பொட்டுக்கடலை வாங்கிவரும்படி மளிகைக்கடைக்கு அனுப்பினாள். பொட்டுக்கடலை வாங்கிக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்த முதலியார் வீடு போய்ச் சேர ரொம்ப நேரம் ஆகும் என்பதால் பொழுதுபோவதற்காக பொட்டலத்தைப் பிரித்து பொட்டுக்கடலைகளை வாயில் போட்டு அரைக்க ஆரம்பித்தார். வீடு வந்து சேர்ந்ததும் பொட்டலத்தினை மனைவியின் கையில் கொடுத்தார். வெறும் பொட்டலம் மடித்த தாள் மட்டுமே அவளது கையில் இருந்தது. பொட்டுக்கடலை அனைத்தும் முதலியாரின் தொப்பையில் நிறைந்தது. கோபமடைந்த அவரது மனையாள் அவரை நடுத்தெருவில் இழுத்துப்போட்டு பூரிக்கட்டையினால் நையப் புடைத்து எடுத்து விட்டாள். அவரது ‘ஆ! அய்யோ!’ என்ற அலறல் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டுகாரர்கள், அவரது இந்த கேவலமான செயலை அறிந்து அதை வெளி உலகிற்கு நேரடி நிகழ்ச்சியாக ஒலிபரப்பினார்கள்.ஒரு சிலர் பக்கத்து ஊருக்கு பஸ் ஏறிப்போய் பரப்பினார்கள்.

அன்று முதல் போனாகானா முதலியார் என்ற சங்கேத பெயரில் ஊர் மக்களால் அவர் அழைக்கப்பட்டார்.)

அந்தக்காலத்தில் சினிமா கொட்டகையில் டாக்கி படம் முடிந்ததும் தேசகீதம் பாடவிடுவார்கள். உடனே ஜனங்கள் அனைவரும் மவுனமாக எழுந்து நின்று அந்த பாடல் ஒலித்து முடியும் வரை மரியாதை செலுத்துவார்கள். நாளடைவில் மக்களுக்கு ஒரே பாடலை திரும்ப திரும்ப கேட்டதால் அலுத்துப்போயினர். அதனால் டாக்கி படம் முடிந்ததும் உடம்பை ஒரு நெளிவு எடுத்து சோம்பல் முறித்துக்கொண்டு அந்த கொட்டகையில் ஒரு கொட்டாவியை விட்டுவிட்டு நடையைக்கட்ட தொடங்கினார்கள்.

ஜனங்களின் இந்த நடவடிக்கைகள் கண்டு போனாகானா முதலியார் மிகவும் மனம் வருந்தினார்.

‘இந்த லோகத்திலே தாய் நாட்டுக்கு மரியாதை செலுத்த அலுப்பு கொண்டவனும் ஒரு மனுசனா? ச்சே. என்ன சனங்கள் இதுகள்’ என்று இவர் ரொம்ப அலுத்துக்கொண்டார்.

உடனே ரொம்ப நாட்கள் தன்னுடைய புத்தியை கசக்கி அந்த முட்டாள் ஜனங்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக ஓர் உபாயம் செய்தார்.

அதன்படி ஜில்லாவிலிருந்து விஞ்ஞானி ஒருவரை வரவழைத்து சனங்களின் தேசாபிமானம் குறைந்ததை அவரிடம் கூறி கதறி அழுதார்.

அந்த விஞ்ஞானி போனாகானா முதலியாரின் கண்ணீரினை துடைத்து விட்டு கூறினார்.
‘கவலைப்படாதீங்கோ முதலியார். இதுக்கு நான் ஒரு பரிகாரம் பண்றேன். ஆனா அதுக்கு கொஞ்சம் செலவு ஆகும்.’

உடனே உற்சாகமாய் துள்ளி எழுந்த முதலியார் ‘அதுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இந்த முட்டாள் சனங்களுக்கு பாடம் கற்பிக்கணும்’ என்று உறுமினார்.

திட்டம் தயாராயிற்று.

அதன்படி,’சப்பாணி டாக்கீஸ்’ சினிமா கொட்டகையின் ஒவ்வொரு நாற்காலியின் மேலும் ஒரு இரும்பு கூண்டு தொங்கவிடப்பட்டது.

படம் முடிந்து தேசியகீதம் ஒலிக்க ஆரம்பித்ததும் கானாபோனா முதலியாரின் திட்டத்தினை அறியாத சனங்கள் வழக்கம்போல் சோம்பல் முறித்துக்கொண்டு நாற்காலியை விட்டு எழ முயன்றபோது அந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த போனாகானா முதலியார் குடுகுடுவென ஓடிப்போய் ஒரு பொத்தானை அழுத்தினார். உடனே நாற்காலிகளின் மேல் தொங்கிக்கொண்டிருந்த இரும்புக்கூண்டுகள் சடாரென கீழிறங்கி அனைவரையும் சிறைபடுத்தியது.அதிர்ச்சியில் சனங்கள் எழுந்து நின்றனர். ஆனால் தேசியகீதம் ஒலித்து முடியும் வரை யாராலும் நகரகூட முடியவில்லை.

தேசியகீதம் ஒலித்து முடித்ததும் போனாகானா முதலியார் மீண்டும் ஒரு பொத்தானை அழுத்தினார்.உடனே அனைத்து கூண்டுகளும் மேல் நோக்கி பறந்து சனங்கள் விடுபட்டனர்.

இப்படியாக போனாகானா முதலியார் தேசாபிமானத்தினை சனங்களுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டினார்.

சில நாட்கள் கழித்து போனாகானா முதலியார் மீண்டும் வருந்தும்படியாக மக்கள் நடந்து கொள்ள ஆரம்பித்தனர்.

அதாகப்பட்டது, கூண்டுக்குள் அடைபட்டதும்; தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்தபடியே கூண்டு திறக்கப்படும்வரை ஒரு சிலர் ஒரு குட்டித்தூக்கம் போட ஆரம்பித்தனர். ஒரு சிலர் பக்கத்து கூண்டினில் அடைபட்டிருந்த மனிதரிடம் பார்த்து முடித்த அந்த டாக்கி படத்தினைப்பற்றி விவாதம் பண்ண ஆரம்பித்தனர். ஒரு சிலர் சட்டைப்பையிலிருந்த கோழி இறகினை எடுத்து காது குடைய ஆரம்பித்தனர்.

இதுகண்டு மனம் வருந்திய போனாகானா முதலியார் மீண்டும் அந்த விஞ்ஞானிக்கு கடிதம் எழுதி வரவழைத்தார்.

சனங்களின் இந்த அட்டகாசத்தினை விலாவாரியாக கேட்டறிந்த அந்த விஞ்ஞானி மீண்டும் சில நவீன கருவிகளை அந்த டாக்கி கொட்டகையில் பொருத்தினார்.

மறுநாள் டாக்கி படம் முடிந்து வழக்கம்போல தேசியகீதம் பாட ஆரம்பித்ததும் கானா போனா முதலியார் ஓடிப்போய் அந்த பொத்தானை அழுத்தி சனங்களை சிறைபிடித்தார். உள்ளே எட்டிப்பார்த்த முதலியார் அனைத்து சனங்களும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு மேற்படி சொல்லப்பட்ட செயல்களை செய்ய ஆரம்பித்ததைப்பார்த்துவிட்டு ஒரு நமுட்டுச்சிரிப்பு சிரித்தபடியே இன்னொரு பொத்தானை அழுத்தினார்.

உடனே நாற்காலிகளில் அந்த விஞ்ஞானியால் பொருத்தப்பட்டிருந்த ஆணிகள் திடீரென முளைத்தன. அமர்ந்திருந்த சனங்களின் பின்புறத்தினை துளைத்தன. அரைத்தூக்கத்திலிருந்த சனங்கள் ‘ஆ’ என அலறியபடி எழுந்து நின்றனர்.

(இவ்வாறு ஆணிக்குத்து பட்ட அப்பாவி மக்கள் மல்லாக்கப்படுக்க முடியாமல் ஒரு மாதத்திற்கு ஒருக்களித்து மட்டுமே படுத்து உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.)

இவ்வாறாக சில காலம் உருண்டோடியது. சனங்களும் அந்த ஊரில் வேறு சினிமா கொட்டகை இல்லாதலால் போனாகானா முதலியாரின் இந்த கொடுஞ்செயலை பொறுத்துக்கொண்டு படம் பார்க்க பழகிக்கொண்டனர்.

சில நாட்கள் கழித்து அதே ஊரில் இன்னொரு பிரம்மாண்டமான டாக்கி கொட்டகை ஒன்று ‘ஜாலி டாக்கீஸ்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த புதிய ஸினிமா கொட்டகை பற்றி ஜட்கா வண்டியில் மைக்செட் கட்டிக்கொண்டு பின்வருமாறு விளம்பரம் செய்துகொண்டு போனார்கள்.

‘எங்களது ‘ஜாலி டாக்கீஸ்’ சினிமா டாக்கி கொட்டகையில் ஆணி கிடையாது. கூண்டு கிடையாது. அவ்வளவு ஏன்? நாற்காலியே கிடையாது. அனைவரும் தரையில் சம்மணம் போட்டபடி நிம்மதியாக படம் பார்க்கலாம். அலுப்பாக இருந்தால் அப்படியே மல்லாக்க சாய்ந்து தூங்கலாம். அனைவரும் வாருங்கள் ஆணி குத்து வாங்காமல் செல்லுங்கள்.’

மேற்படி விளம்பரம் கண்ட சனங்கள் படம் பார்ப்பதற்கு அந்த சினிமா கொட்டகைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

அதன்பிறகு போனாகானா முதலியாரின் ‘சப்பாணி டாக்கீஸ்’ பக்கம் யாரும் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.

தனிமையில் தனது டாக்கி கொட்டகையில் அமர்ந்து புலம்பிக்கொண்டிருந்த போனாகானா முதலியார் அந்த ‘ஜாலி டாக்கீஸ்’ முதலாளியைப்பார்த்து ‘என்யா இப்படி சனங்களை கெடுக்கறீர்’ என்று சண்டையிட தீர்மானித்து ‘ஜாலி டாக்கீஸ்’ சென்று அங்கிருந்த முதலாளியின் அறையை திறந்தார். அங்கு அவர் கண்ட காட்சி போனாகானா முதலியாருக்கு ஆயிரம் பதினாயிரம் லட்சம் ஆணிகள் தனது பின்புறத்தில் குத்தப்பட்டதுபோல அதிர்ந்து போனார். காரணம் அந்த முதலாளி நாற்காலியில் நமட்டுச்சிரிப்புடன் அமர்ந்திருந்தார் அந்த விஞ்ஞானி.

(பின்குறிப்பு: பிற்காலத்தில் துரதிஷ்டவசமாக முதலமைச்சர் பதவியை அடைந்த போனாகானா முதலியார் அந்த விஞ்ஞானியை தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்தார் என்பதனை அறிக.)

Advertisements

11 பின்னூட்டங்கள்

 1. மே25, 2009 இல் 2:34 முப

  :)) நல்லா இருக்கு கதை. இறுதியில் ஒரு புன்சிரிப்போடு முடிகிறது.

  தொடர்ந்து எழுதுங்கள்.

 2. மே26, 2009 இல் 11:38 முப

  கடைசியில் சிறுகதைக்கே உரிய பாணியில் முடித்துள்ளீர்கள்.. 1500 கிடைக்க வாழ்த்துக்கள் 🙂

 3. மே28, 2009 இல் 4:46 முப

  ரொம்பவே சிரிக்க வைத்தது. என் வாழ்த்துக்கள்.

 4. மே28, 2009 இல் 7:48 முப

  நல்லாருக்கு மணி, வாழ்த்துக்கள்!

 5. gundumani said,

  மே29, 2009 இல் 8:09 முப

  நன்றி மணிவண்ணன் சார்! தங்களது வலைப்பதிவு சிந்திக்க வைத்தது. வாழ்த்துக்கள்.

 6. gundumani said,

  மே29, 2009 இல் 8:12 முப

  நன்றி வித்யா! தங்களது போட்டிக்கான சிறுகதை ‘அக்கரைப் பச்சை’ நன்றாக உள்ளது.

 7. gundumani said,

  மே29, 2009 இல் 8:14 முப

  நன்றி கடைக்குட்டி!

 8. gundumani said,

  மே29, 2009 இல் 8:19 முப

  நன்றி! எரனைக்கல் மோதிரம் அருமை!

 9. மே29, 2009 இல் 5:09 பிப

  ஹா ஹா ஹா.. செம்ம டிவிஸ்ட்டு… சிரிச்சுட்டேன்..

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  (ஒரு கதையை மாத்திரம்தான் அனுப்ப சொல்லியிருந்தாங்கன்னு நினைக்குறேன். நீங்க நிறைய்ய எழுதி குவிச்சுட்டீங்க. எதுன்னு சீக்கிரம் செலக்ட் செஞ்சு அதை மாத்திரம் குறிப்பிடுங்க.)

 10. செந்தழல் ரவி said,

  ஜூன்19, 2009 இல் 12:32 பிப

  கல்கியை கிண்டல் செய்ய ஆரம்பிக்கும் முதல் வரியிலேயே புன்னகையை வரவைக்கிறார் மணிப்பயல்…கதையின் நடுவில் வரும் ஒரு ட்விஸ்ட் கண்டிப்பாக சிரிக்கவைக்கும்…அப்புறம் இன்னோரு ட்விஸ்ட் இன்னோரு புன்னகை…கடைசியில் இன்னொரு சூப்பர் ட்விஸ்ட் என்று சுவையான கதை…எதிர்பார்ப்பு இல்லாமல் படித்தால் நிச்சயம் ரசிக்கலாம்…

  என்னுடைய மதிப்பெண் 65 / 100

 11. ஜூன்20, 2009 இல் 9:19 முப

  /(பின்குறிப்பு: பிற்காலத்தில் துரதிஷ்டவசமாக முதலமைச்சர் பதவியை அடைந்த போனாகானா முதலியார் அந்த விஞ்ஞானியை தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்தார் என்பதனை அறிக.)
  //

  யாருண்ணு தெரியலயே..,


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: