நம்பினால் வெம்புங்கள்

நாய் விற்ற காசு குறைக்காது என்பார்கள். Zee தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் பேய் விற்று காசு சம்பாதிக்க நினைக்கிறது. தூக்கம் கண்களை தழுவும் இரவு நேரம் 9.30 மணிக்கு ‘நம்பினால் நம்புங்கள்’ என்ற ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது.

அதில் ஒரு வயது முதிர்ந்த கிழவர் மண்வெட்டியுடன் வேலை வெட்டியை பார்க்க வயலுக்கு மெதுவாக நொண்டியபடி நடந்து செல்கிறார். அவரை ஒரு கேமரா கண்டபடி நடுங்கியபடி கூடவே ஒரு பயங்கரமான இசையுடன் பின்தொடர்கிறது. ஒருவேளை கேமராமேனுக்கு நரம்புதளர்ச்சியா அல்லது இவர்கள் படப்பிடிப்பு நடத்தும் இடங்களில் பேய்கள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ தெரியவில்லை.

அப்படியே கேமரா அந்த கிழவனை சுற்றி வந்து நேராக அவரது முகத்திற்கு அருகில் செல்கிறது. அவரிடம் பேட்டி ஆரம்பமாகிறது.

‘இந்த ஊர்ல பேய்கள் நடமாடுறதா பேசிக்கிறாங்களே. நீங்க பார்த்து இருக்கீங்களா பெரியவரே?’

உடனே அந்த கிழவர்

‘இங்க பேயும் இல்ல. ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஏன்யா! இத தெரிஞ்சிக்கத்தான் வேலை மெனக்கெட்டு ஒரு காரை எடுத்துகிட்டு நாலைஞ்சு பேர் கௌம்பி வந்தீங்களா? அட வெங்காயங்களா!’ என கேட்பார் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்.

ஆனால் அவர் உங்களைப்போல முட்டாள் இல்லை. அப்படி சொன்னால் தன்னுடைய மூஞ்சியை அந்த டி.வி பொட்டியில காட்டுவாங்களா? அந்த பெரியவர் என்ன பெரியாரா அப்படி சொல்லி வாய்ப்பை நழுவ விடுவதற்கு?

உடனே அந்த கிழவர் பேட்டியை ஆரம்பிக்கிறார்.

‘ஆமாம் தம்பி. ராத்திரி ஆயிடிச்சின்னா பேய்கள் நடமாட ஆரம்பிச்சிடுது. நான் பார்த்திருக்கேன்.’

‘பேய்களோட உருவம் எப்படி இருக்கும் பெரியவரே’

‘அது சில சமயம் நாய் உருவத்திலே ரோட்டுல குறுக்கே ஓடும். சில சமயம் பாம்பு வடிவத்தில போய்கிட்டு இருக்கும். அப்புறம் சில சமயத்துல பூனை மாதிரி சந்துபொந்துல ஒடிக்கிட்டு இருக்கும்.நான் இந்த பேய்களை பல வருசமா இப்படி பார்த்துக்கிட்டு இருக்கேன் தம்பி. அது பேசாம போய்கிட்;டு இருக்கும். அதை யாராவது தீண்டினா உயிரை எடுத்திட்டு போய்டும்.’

உடனே ஒரு பின்னனி குரல் பயங்கர இசையுடன் பேச ஆரம்பிக்கும்.

‘அந்த பெரியவர் சொன்னதைக்கேட்டு நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். அந்த பேய்களை நாமும் பார்;த்துவிடுவது என்று முடிவெடுத்து அன்று இரவு முழுவதும் அந்த கிராமத்தின் ஒதுக்குப்புறமான ஒரு புதரில் பதுங்கியபடி காத்திருந்தோம்.’

நள்ளிரவு நேரம். படப்பிடிப்பு குழுவினர் நான்கைந்து பேர் அந்த கும்மிருட்டில் ஒரு குப்பை மேட்டின் மேல் அமர்ந்து தூக்கக் கலக்கத்துடன் காத்திருக்கின்றனர் அந்தப்பேயைப் பார்த்துவிடும் தீர்மானத்துடன் மற்றும் அந்தப்பேயை படமெடுத்து ஒளிபரப்பி நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கு உதவும் சேவை மனப்பான்மையுடன். குப்பை மேட்டில் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவர் முகத்தினையும் அந்த நரம்புதளர்ச்சி கேமரா லேசான வெளிச்சத்தில் மாறி மாறி காட்டுகிறது.

அனைவரின் முகமும், சந்திராயன் விண்கலம் மேலெழும்பியபொழுது இருந்த மயில்சாமி அண்ணாதுரையின் முகபாவத்துடனும், பொக்ரான் அணுகுண்டு வெடிப்பதற்கு முன் இருந்த அப்துல் கலாமின் முகபாவத்துடனும், உலகின் முதல் பல்பு எரிவதற்கு முன் இருந்த எடிசனின் முகபாவத்துடனும் ஏதோ ஒரு அதிசய கண்டுபிடிப்பினை நிகழ்த்தப்போகும் ஆர்வத்துடன் தெரிகிறது.

திடீரென தூரத்தில் ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்கிறது. உடனே கேமராவானது குரைப்பு சத்தம் வந்த திசையை நோக்கி மூச்சிறைப்பு வாங்க ஓடுகிறது. அங்கு ஒரு நாய் நின்றுகொண்டு கீழே கிடந்த ஒரு எச்சில் இலையை நக்கிக்கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பு கும்பலைக் கண்டதும் ‘ஆகா இவனுங்களும் நம்ம டின்னரை பங்கு கேட்க வந்துட்டானுங்கய்யா! வந்துட்டானுங்கய்யா!!’ என எண்ணியபடி இவர்களைப்பார்த்து உருமுகிறது.

பின்னனி குரல் கடைசியாக இப்படி பேசி முடிக்கிறது.

‘அந்த பெரியவர் சொன்னது போல் இரவில் நாய் உருவத்தில் திரிந்த அந்த பேயைப் பார்த்த அதிர்ச்சியுடன் நாங்கள் அந்த கிராமத்திலிருந்து திரும்பினோம்….. நம்பினால் நம்புங்கள்’

ஆகா! என்ன ஒரு காணக்கிடைப்பதற்கரிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி!

மத்திய அரசு உடனே தலையிட்டு அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஏதாவது ஒரு தேசிய விருது அல்லது குறைந்தபட்சம் ஒரு வெண்கலக்கிண்ணமாவது கொடுத்து கவுரவித்து, மக்களுக்கு விழிப்புணர்ச்சி மற்றும் பகுத்தறிவை வளர்க்கக்கூடிய இத்தொடரை தயாரிப்பதற்கு மேன்மேலும் ஊக்கமளிக்க வேண்டும்.

மேலும், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் மக்கள் யாரும் தூங்கிவிடாமல் கட்டாயமாக அந்த தொடரை பார்த்து விட்டுத்தான் தூங்க வேண்டும் என்று ஒரு அவசர சட்டத்தினை முன் தேதியிட்டு இயற்ற வேண்டும். ஒரு வேளை அந்தத்தொடரை பார்க்காமலே தூங்கிவிடும் தேசத்துரோகிகளை நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி உடனே தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும்.

ஒரு நாள், நானும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நாய் வடிவில் வந்த அந்தப்பேயை பார்த்த மகிழ்ச்சியில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்துவிட்டு தூங்க நினைத்தபோது, அதே தொலைக்காட்சியில் அடுத்த நிகழ்ச்சியாக பழைய பாடல் ஒன்று ஒளிபரப்பானது.

‘வேப்பமர உச்சியில் நின்னு பேயென்னு ஆடுதுன்னு
விளையாடப்போகும்போது சொல்லி வைப்பாங்க.
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க.
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே.
நீயும் வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே.’

உண்மையிலேயே வேலையற்ற வீணர்கள் யாரென்றால் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியினைப்பார்த்த நானும், அதை விமர்சித்து நான் எழுதிய இந்தக் கட்டுரைரையை வேலை மெனக்கெட்டு படித்துக்கொண்டிருக்கும் நீங்களும்தான்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: