சாமி குத்தம் – சிறுகதை

கத்தியின் கூர்முனை அந்த நள்ளிரவின் கருமையிலும் மின்னியது.

அந்தக்கத்தியை தன்னுடைய இடுப்பில் எடுத்து செருகிக்கொண்டான் அறிவழகன்.

‘நாளைக்கு இந்நேரம் நாம என்ன நிலையில் இருப்போம்னு யாருக்கும் தெரியாது. ஆனால் இத செஞ்சுத்தான் ஆகணும். வேற வழியில்லை’ என்றான் கவியரசு.

‘நாம எவ்வளவு சொல்லியும் காது கொடுத்து கூட கேட்க மாட்டேனுட்டானுங்க.அவனுங்களுக்கு புத்தி புகட்டினாத்தான் நாம இந்த ஊர்ல இனிமே மனுசனா இருக்கலாம்’ பற்களை நறநறவென கடித்தான் மேகநாதன்.

……………………………………………………………………………………

அன்று மாலை ஊர் மத்தியில் நடந்த ஊர்ப்பொதுக்கூட்டத்தில் அறிவழகன் அமைதியாகத்தான் சொன்னான்.

‘அய்யா! பெரியவங்க எல்லாரும் இங்க இருக்கீங்க. உங்களுக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை. ஒவ்வொரு வருசமும் நடக்கிற அம்மன் தேரோட்டம் எல்லாத் தெருவுக்கும் போகுது. ஆனா பல வருசமா எங்க மேலத்தெருவுக்கு மட்டும் வர்றதில்ல. காரணம் கேட்டா அது அந்த காலத்திலேயிருந்து வர்ற நடைமுறைன்னு சொல்றீங்க. ஆனா அது உண்மையில்லைங்க. அந்த காலத்துல எங்க தெரு ரொம்ப குறுகலா இருந்துச்சு. அதனால தேர் உள்ள வரமுடியல. ஆனா இப்பத்தான் அரசாங்கத்துல நல்ல அகலமா சாலை போட்டு கொடுத்து இருக்காங்க. அதனால இந்த வருசம் அம்மன் தேரோட்டம் எங்க தெருவுக்கும் வரணும்னு எங்க தெரு சனங்க ஆசைப்படுறாங்க. நீங்க பெரியவங்கதான் நல்ல முடிவு சொல்லணும்’

உடனே தெட்சிணாமூர்த்தி கோபமாக எழுந்தார்

‘என்னப்பா! புதுசா பிரச்சினையை கௌப்பலாம்ணு வந்திருக்கியா?. உங்க தெரு வழியா எந்த வருசமும் அம்மன் போனதில்லை. அப்படி வரச்சொல்லி உங்கத்தெருவுல இருக்கிற பெரியவங்க யாரும் இதுவரைக்கும் எங்க கிட்ட கேட்டதும் இல்ல. இப்ப நீ வந்து புதுசா இந்தப்பிரச்சினையை கிளப்பாதே. போகாத தெருவுக்கு அம்மன் போனா சாமி குத்தமாயிடும். அப்புறம் ஊருக்கு ஏதாவது கெடுதி நடந்தா என்ன பண்றது? கொஞ்சம் படிச்சிட்டாலே புத்தி கோணலாயிடும் போலிருக்கு.’

‘அய்யா! சாமிக்கு முன்னாடி எல்லாரும் சமம்தானுங்களே. இந்தப்பூமியை படைச்ச சாமிக்கு அந்தப்பூமியில இருக்கிற எங்க தெரு மட்டும் எப்படிங்க பிடிக்காம போகும்?. நீங்க இப்படி பண்றதால எங்க தெரு சனங்கள மத்த தெரு சனங்க ஏதோ நாயைப் பார்க்கிறது மாதிரி கேவலமா பார்க்கிறாங்க.ரொம்ப அவமானமா இருக்குங்க. கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க.’

‘இதப்பாரு தம்பி! நீ எங்களுக்கு அறிவுரை சொல்லாத. என்ன பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். நீ சொல்ற படியெல்லாம் நாங்க செய்ய முடியாது. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்க. முதல்ல கூட்டத்த விட்டு வெளியே போ.’

அவமானப்பட்டவனாக திரும்பினான் அறிவழகன்.

……………………………………………………………………………………

‘சரி. நாளைக்கு என்ன பண்ணனும்னு இன்னும் ஒரு தடவை சொல்றேன். எல்லாரும் கவனமா கேட்டுக்கங்க.
நாளைக்கு அந்தி நேரத்துலதான் அந்த அம்மன் தேர் நம்ம தெரு முனைக்கு பக்கத்தில வரும். அந்த நேரத்தில நாம ஆறு பேரும் திடீர்னு கத்தி அருவாளோட கூட்டத்துல நுழையணும். அங்க நின்னுகிட்டு இருக்கிற ஊர் நாட்டாமை கல்யாணசுந்தரம் கழுத்தில கத்தியை வெச்சிட்டு தேரை நம்ம தெருவுக்கு திருப்பச்சொல்லி மிரட்டணும். தேர் நல்லபடியா நம்ம தெருவை சுத்தி வந்ததும் நாம அங்கிருந்து போய் போலீசுல சரணடையனும். என்ன தண்டனை கிடைக்குதோ அதை நம்ம தெரு சனங்க நலனுக்காக நாம ஏத்துக்குவோம்.’

எல்லோரும் தலையசைத்து சம்மதம் தெரிவித்தனர்.

…………………………………………………………………………………..
மறுநாள் அம்மன் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.

ஊரில் அனைத்து தெருக்களையும் சுற்றிவந்தபின் மேலத்தெரு முனைக்கு அருகிலிருந்த புதுத்தெருவுக்குள் நுழைய ஆரம்பித்தது.

திடீரென கூட்டத்தில் ஊடுறுவிய அறிவழகனும் அவனது நண்பர்களும் இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்து தேர் முன்பாக நடந்து வந்துகொண்டிருந்த ஊர் நாட்டாமை கல்யாணசுந்தரத்தின் கழுத்தில் வைத்து அழுத்தினர்.

‘டேய்! யாராவது கிட்ட வந்தீங்கன்னா உங்க நாட்டாமை பொணமாயிடுவாரு. மரியாதையா தேரை மேலத்தெரு பக்கம் திருப்புங்கடா!’ என்று கோபமாக கத்தினான் அறிவழகன்.

தேர் மேலத்தெரு பக்கமாக திரும்ப ஆரம்பித்தது.

அப்போது திடீரென கூட்டத்திலிருந்து நான்கைந்து போலிஸார் துப்பாக்கிகளுடன் அறிவழகனையும் அவனது நண்பர்களையும் சுற்றி வளைத்தனர்.

‘டேய்! மரியாதையா நாட்டாமையை விட்டுட்டு சரண்டர் ஆயிடுங்க. இல்லைன்னா, நாயைச் சுடுறது மாதிரி சுட்டு சாகடிச்சிடுவேன்.’

அறிவழகனும் அவனது நண்பர்களும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கைகளைத்தூக்கியபடி போலீசாரிடம் சரணடைந்தனர். உடனே ஊர்மக்கள் அவர்களை சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தனர். உடம்பில் ரத்தம் வழிய அவர்களை போலீசார் தரதரவென இழுத்துச்சென்றனர்.

‘நீங்க இப்படி ஒரு திட்டம் போட்டு இருக்கீங்கன்னு எனக்கு காலையிலேயே உங்க தெருக்காரன் ஒருத்தன் சொல்லிட்டான்டா. உங்களை இப்படி கையும் களவுமா பிடிக்கணும்னுதான் போலீஸ்ல புகார் கொடுத்திட்டு காத்துகிட்டு இருந்தேன். என் கழுத்திலயா கத்தி வெக்கறீங்க? ஜெயில்ல கிடந்து சாவுங்கடா!’ என்று கோபமுடன் உருமினார் நாட்டாமை கல்யாணசுந்தரம்.

‘நல்லவேளை! எங்க, அவனுங்க திட்டப்படி தேரு அந்தத்தெருவுக்குள்ள போயி சாமி குத்தத்துக்கு ஆளாயிமோன்னு பயந்துகிட்டே இருந்தேன். அந்த மாரியாத்தா நம்மளையெல்லாம் காப்பாத்திட்டா.’என்று பரவசமுடன் அம்மனை பார்த்து வணங்கினார் தேரின் மேல் அமர்ந்திருந்த பூசாரி கோபாலசாமி.

‘சரி சரி! தேரை புதுத்தெருபக்கம் திருப்புங்கப்பா’என்று கூட்டத்தினை விரட்டினார் தெட்சிணாமூர்த்தி.

தேர் மேலத்தெரு முனையிலிருந்து புதுத்தெரு நோக்கி நகர ஆரம்பித்தது.

திடீரென பயங்கர சத்தத்துடன் தேரின் அச்சாணி முறிந்து தேர் ஒருபக்கமாக சாய்ந்தது. தேரின் மேல் அமர்ந்திருந்த பூசாரி,தேரிலிருந்து கீழேவிழுந்து தேருக்கு அடியில் நசுங்கினார். தேரிலிருந்து விடுபட்ட வேகத்தில் சக்கரமானது அருகில் நின்றுகொண்டிருந்து நாட்டாமை கல்யாணசுந்தரத்தின் மீது மோதி தூக்கி எறிந்துவிட்டு வேகமாக ஓடி, மேலத்தெருவுக்குள் நுழைந்து அறிவழகனின் குடிசை வீட்டின் சுவற்றில் மோதி கீழே விழுந்து அடங்கியது.

சாய்ந்து கிடந்த தேரின் மேல் இருந்த அம்மன், முன்பைவிட மேலும் உக்கிரமாகக் காட்சியளித்தாள்.

.

Advertisements

போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்!

பம்மல் கே சம்பந்தம் படத்துல கமல் கல்யாணம் ங்கற வார்த்தையைக் கேட்டாலே ‘உவ்வே’ ன்னு எதுக்கு குமட்டிக்கிட்டு வாந்தி எடுத்தார்னு ஒருநாள் மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்து சிந்தனை பண்ணிப்பார்த்தேன்.

கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் னு இந்த கெழங்கட்டையெல்லாம் அடிக்கடி சொல்லுதுங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டவனோட நெலமையோ ஒரு வாரத்து தயிர் மாதிரி ரொம்ப நாறிப்போயிடுதுங்க.

அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மாதிரி கலகலப்பாய் போய்க்கிட்டு இருக்கிற பிரம்மச்சாரியோட வாழ்க்கை கல்யாணத்துக்கு அப்புறம் மெகாதொடர் சீரியல் மாதிரி ஒரே சோகமாயிடுதுங்க.

‘வீட்டைக் கட்டிப்பாரு. கல்யாணம் பண்ணிப்பாரு.’ ன்ற பழமொழியை அனுபவிச்சி முதல்ல சொன்னவன் என்ன பாடுபட்டிருப்பான்னு கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.

கல்யாணம் பண்றதுக்குள்ள எத்தனை சடங்கு, சம்பிரதாயம்!

முதல்ல பொண்ணு தேடுற படலம்.

கேசரி,ஜாங்கிரி இப்படிப்பட்ட இனிப்புப் பண்டங்களுக்கு அடிமையான பசங்களை நண்பனா கூட்டிக்கிட்டு பொண்ணு பார்க்கப்போறவன் இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ண முடியாது. பொண்ணு எல்லாருக்கும் பிடிச்சிப்போயி இருந்தாலும் பொண்ணு தேடுற படலம் முடிஞ்சு போயிடுச்சின்னா அப்புறம் திங்கிறதுக்கு சுவீட் கிடைக்காதேங்கற பதட்டத்துல ஏதாவது குறையைக் கிளப்பி விட்டுட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை துண்டை உதறி தோள்ல போட்டுகிட்டு ‘அப்புறம் சொல்லி அனுப்புறோம்’ னு கிளம்ப வெச்சிடுவானுங்க.

பொண்ணு நல்லா லட்சணமா இருந்தாலும் அடுத்தபடியா திங்கறதுக்கு பட்சணம் கிடைக்காதேங்கற எண்ணத்துல மாப்பிள்ளைக்காரப் பயல் கிட்ட ‘டேய்! பொண்ணோட மூக்கு அருவா மாதிரி வளைஞ்சு இருக்குடா’ ன்னு உசுப்பேத்தி விட்டுட்டு அந்த பொண்ணை பிடிக்கலன்னு சொல்ல வெச்சிடுவானுங்க.

சுவீட் முட்டை போடுற வாத்தை யாராவது கொல்ல நினைப்பாங்களா?.

இப்படி அடுத்தவனுக்குப் பொண்ணு பார்க்கப் போயே தன்னோட சுவீட் தாகத்தை தீர்த்துக்குவானுங்க.

ஒருவழியா நண்பர்களோட சதித்திட்டங்களையும் முறியடிச்சிட்டு பொண்ணு புடிச்சிப்போயிடுச்சின்னா அடுத்ததா நிச்சயதார்த்தம்னு ஒண்ணு பண்ணுவாங்க.

தட்டுல பழம், வெத்தலை பாக்கு இதெல்லாம் வெச்சி பொண்ணோட அப்பனும் மாப்பிளையோட அப்பனும் மாத்தி மாத்தி கொடுத்துக்குவானுங்க. என்னய்யா விளையாடறீங்களா?

அவங்க அவங்க வாங்குன ஆரஞ்சுப் பழத்தை அவனவன் உரிச்சித் தின்னுக்க வேண்டியதுதானே? எதுக்கு வாங்குன பழத்தை மாத்தி மாத்தி கொடுத்துக்கணும்?. என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இருக்கு?

நிச்சயதார்த்தமும் முடிஞ்சி அப்புறம் கண்ணாலம்.

கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி மாப்பிள்ளை நேரா ஊர்ல இருக்கிற ஏதாவது ஒரு பியூட்டி பார்லருக்குப்போயி ஷேவ் பண்ணி முடி வெட்டிக்குவான். பியூட்டி பார்லர் காரன் மாப்பிள்ளை கிட்ட ‘ஃபேசியல் பண்ணிக்குங்க. அப்பத்தான் நாளைக்கு மூஞ்சி பளபளன்னு இருக்கும்’ னு சொல்லி உசுப்பேத்தி விடுவான். கருவாப் பயலாட்டம் இருக்கிற நம்ம மாப்பிள்ளைப் பயலோட மூஞ்சியில சேறு மாதிரி எதையோ குழப்பி அப்பிவிட்டு காய வைப்பான்.காய்ஞ்சுகிட்டு இருக்கிற அந்த கொஞ்ச நேரத்துல நம்ம மாப்பிள்ளைப்பய கண்ணை மூடிக்கிட்டு கற்பனையில காஷ்மீர் மாதிரி குளுகுளு பிரதேசத்துக்கு பறந்துபோயி அந்த பொண்ணு கூட ஒரு குத்தாட்டம் போட்டு முடிச்சிடுவான். அரை மணிநேரம் கழிச்சி மூஞ்சிய கழுவிப்பார்த்தா கரிச்சட்டியில சுண்ணாம்பு அடிச்சது மாதிரி மூஞ்சி வெள்ளையா இருக்கும்.

கல்யாணப்பொண்ணு என்ன பண்ணுவா தெரியுமா? அவளோட வீட்டுக்கொல்லைப்புறத்தில இருந்த மருதாணி மரத்துல உள்ள எல்லா இலையையும் உருவிப்போட்டு அம்மியில வெச்சி அரைச்சு கை கால் விரல்ல எல்லாம் சாணி அப்புன மாதிரி அப்பிகிட்டு ‘அன்னக்கிளி உன்னத்தேடுது’ ன்னு டூயட் பாடிக்கிட்டு தூங்காம விடிய விடிய உக்கார்ந்து கெடக்கும்.

மறுநாள் கல்யாணம்…

விடிஞ்சதும் கல்யாண மண்டபத்துக்கு சொந்தக்காரனுங்க ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுடுவானுங்க.

ரொம்ப தூரத்திலே இருந்து வந்த ஆளுங்க அதது ஒரு மூலையில உட்கார்ந்துகிட்டு தூங்க ஆரம்பிச்சிடுவானுங்க.

அந்த நேரத்துல மண்டபத்துக்கு வந்து சேரும் வித்துவானுங்க வாயில நாதஸ்வரத்தை வெச்சி ஊதி, ரெண்டு கையாலயும் தவிலை அடிச்சி தூங்கிகிட்டு இருக்கிற கூட்டத்தையெல்லாம் எழுப்பி விட்ருவாய்ங்க. வாரிச்சுருட்டிகிட்டு எழுந்திருக்கிற சொந்தக்காரனுங்க வாயில வெத்தல சீவல் போட்டுகிட்டு கல்யாணத்தை கவனிக்க ஆரம்பிச்சிடுவானுங்க.

அப்புறம் பொண்ணு மாப்பிள்ளைய வரவழைச்சி இந்த அய்யரு அவங்க ரெண்டு பேரையும் செக்குமாடு மாதிரி மணமேடையை சுத்தி வரச்சொல்லி டயர்டாக்கிடுவாரு.அப்புறம் பொண்ணு மாப்பிள்ளைய மணமேடையில உட்கார வைப்பாங்க. அய்யரு எதிரில இருக்கிற அடுப்பை பற்ற வெச்சி காய்ஞ்ச குச்சியெல்லாம் அதுல பொறுக்கிப்போட்டு புகைமூட்டத்தைக் கிளப்பி விடுவாரு.

அடுப்பு அனல் பட்டு வியர்வையில மாப்பிள்ளை பொண்ணோட மேக்கப் எல்லாம் கலைஞ்சி போய் ரெண்டுபேரும் வெயில் நேரத்துல மணல் திட்டுல சிக்குன அகதிகள் மாதிரி ஆயிடுவாங்க.

புகை மூட்டம் கிளம்பி அய்யரோட மூக்குக்குள்ள போயி தும்மலை கௌப்பி விடும். தும்மினா சுத்தி உட்கார்ந்து இருக்கிறவனுங்க கொந்தளிச்சிடுவானுங்கங்கற பதட்டத்துல அய்யரு ‘கெட்டி மேளம். கெட்டி மேளம்’ன்னு கத்தி வித்துவான்களை உசுப்பி விட்ருவாரு. வித்துவானுங்களும் தடார் புடார் னு அடிச்சி இன்னும் அதிகமா சத்தத்தை கௌப்புவாய்ங்க. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திகிட்டு அய்யரு வாய்க்குள்ள லாக் ஆன தும்மலை யாருக்கும் தெரியாம ரிலீஸ் பண்ணி விட்ருவாரு.

மாப்பிள்ளை தாலியை எடுத்து பொண்ணு கழுத்துல ஒரு முடிச்சி போடுவான். ஆசையா அடுத்த முடிச்சி போடறதுக்குள்ள சுத்தி நிக்கிற சொந்தக்கார பொம்பளைங்க அவனோட கையிலேயிருந்து தாலியை வெடுக்குன்னு பிடுங்கி அவங்களே மீதி ரெண்டு முடிச்சையும் போட்டுவிட்ருவாங்க.

அந்த உச்சகட்ட நேரத்துல ஃபோட்டோகிராபரு மல்லாக்கப் படுத்துகிட்டும், தலைகீழா தொங்கிகிட்டும் பல ஆங்கிள் ல போட்டோக்கள் எடுத்துத்தள்ளுவான்.

உடனே சுத்தி இருக்கிற ஜனங்கள் எல்லாம் தன்னோட கையில இருக்கிற அரிசியை மாப்பிள்ளை, பொண்ணோட மூஞ்சியில வேகமா தூக்கி எறிஞ்சி ஆசிர்வாதம் பண்ணுவாங்க. தூக்கி எறிஞ்ச அரிசியில முக்கால்வாசி அந்த அய்யரோட உச்சந் தலையில போய் உட்கார்ந்துக்கும்.

ஆசிர்வாதம் பண்ணுன கையோட உடனே எழுந்திருச்சி ஜனங்கள் எல்லாம் பந்தி நடக்கிற இடத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பிச்சுடும்.

மாப்பிள்ளையும் பொண்ணும் டயர்டாயி போய் ‘உஷ். அப்பாடா’ ன்னு மணமேடையில உட்காருவாங்க. அந்த நேரத்துலதான் நண்பனுங்க எல்லாம் அட்டைப்பெட்டி மேல கலர் பேப்பரை சுத்திகிட்டு வந்து ‘மச்சி வாழ்த்துக்கள் டா’ ன்னு சொல்லி, மாப்பிள்ளை பொண்ணை எழுப்பிவிட்டு, கையில கிப்ட் கொடுத்துட்டு 32 பல்லும் தெரியறமாதிரி சிரிச்சிகிட்டு குரூப் போட்டோ எடுத்துக்குவானுங்க.

கொஞ்சநேரத்துல சொந்தக்காரனுங்க எல்லாம் பந்தியில குந்தி தின்னு முடிச்சிட்டு மொய் எழுதிட்டு சொந்த ஊருக்குக் கௌம்பிடுவானுங்க.

தனியா உட்காரந்து கிடக்கிற பொண்ணு மாப்பிள்ளைக்கு பசியெடுக்க ஆரம்பிச்சிடும். ரெண்டுபேரும் பந்தி நடக்குற இடத்தையே ஏக்கமா அடிக்கடி எட்டிப் பார்த்துகிட்டு உட்கார்ந்து கிடக்கும்.

சாயங்காலம் நாலு மணிக்கு வந்து யாராவது ரெண்டுபேரையும் பந்திக்கு கூட்டிகிட்டுப்போய் மிச்சம் மீதி இருக்கிறதை இலையில வெச்சி சாப்பிட வெப்பாங்க.

அப்புறம் எல்லாரும் பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பிடுவாய்ங்க.

அப்புறம் கொஞ்சநாளு மாப்பிள்ளையும் பொண்ணும் குஜாலா கூத்தடிச்சி கொண்டாடுவாங்க.

மோகம் முப்பது நாளு. ஆசை அறுபது நாளு. மொத்தம் தொண்ணுறு நாளு கழிச்சி ரெண்டுபேரும் சம்பாதிச்சி குடும்பம் நடத்த திண்டாடுவாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி குழந்தை குட்டிகள். அப்புறம் அதை வளர்த்து… படிக்க வெச்சி… கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு வரன் தேடி அலைவாங்க..

முதல்ல பொண்ணு பார்க்கிற படலம்…

அய்யய்யோ. தேய்ஞ்சி போன சி.டி மாதிரி திரும்பவும் மொதல்லே இருந்தா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்……..

32 கேள்விகள்

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என்னோட பேரு மணிகண்டனுங்க. நேரா பாக்குறப்ப மணிசார் மணிசார்னு மரியாதையா கூப்புடுவாங்க. கொஞ்சம் அப்படி இப்படி நவுந்து போனா ‘இந்த மணிப்பய இருக்கானே…அவன்…’ ன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க. எதுக்கு வம்புன்னு எனக்கு நானே மணிப்பயல்னு பேர மாத்தி வெச்சிகிட்டேன்.புடிக்கலன்னா என்ன பண்ண போறீங்க? ஆளுக்கு ஒரு பட்டப்பேரு வெச்சி கூப்பிடுவீங்க. எதுக்குங்க வம்பு?

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

பக்கத்து வீட்டுத் தாத்தா செத்துப்போனப்ப கிழவியைக் கட்டிப்புடிச்சி கிட்டு அழுதேன். (அழுதாத்தான் திங்கறதுக்கு பலகாரம் கொடுப்பாங்களாம்ல?). கருமம் அந்த தேதியெல்லாமா ஞாபகம் வெச்சுக்க முடியும்?

3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும். ஆனா என்ன எழுதினேன்னு எழுதினதுக்கப்புறம் எனக்கே புரியாது.

4.பிடித்த மதிய உணவு என்ன?

ஓசியில் கிடைத்தால் பிரியாணி. காசுக்கு சாப்பிட்டால் தயிர்சாதம்.

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

இந்தக்கேள்விக்கு உண்மையைச்சொன்னா அப்புறம் யாராவது என்னோட நட்பு வெச்சுக்குவாங்களா?

6.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?

முதல்ல குளிக்கப் பிடிச்சாத்தானே அப்புறம் இந்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியும்?.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முன்னப் பின்ன அறிமுகம் இல்லாத ஆளை எதுக்குங்க கவனிக்கனும்?

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

அது தெரிஞ்சிருந்தாதான் வாழ்க்கையில இந்நேரம் நான் உருப்பட்டு இருப்பேனே.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க. இப்போதைக்கு என்னோட சரிபாதி என்னோட ஆடைகள்தான்( ஏன்னா ஆள் பாதி. ஆடை பாதி இல்லையா?)

துவைச்சி இருந்தா போட்டுக்க பிடிக்கும்.
அழுக்கான அப்புறம் துவைக்கப்பிடிக்காது.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

சொல்ல மாட்டேன். எனக்கு வெக்கம் வெக்கமா வருது.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

புதுசா வாங்குனப்ப வெள்ளைக் கலர்ல இருந்தது. இப்ப என்ன கலர்ல இருக்குன்னு தெரியலையே.(சட்டையை துவைச்சாதான் ஒரிஜினல் கலர் தெரியும் னு சொல்றாங்களே.அப்படியா?)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பக்கத்து வீட்டுக் கிழவி நாராசமாப் பாடிக்கிட்டு இருக்கிற பழைய ‘காத்தவராயன்’ சினிமாப்பாட்டு.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

அது எழுதப்போற பேப்பரோட நிறத்தைப் பொறுத்தது.

14.பிடித்த மணம்?

சம்மணம்.(சும்மா குந்தி கிடக்கத்தாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்).

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

என்கிட்ட கடன் வாங்கிட்டு குடுக்காம டிமிக்கி குடுத்துகிட்டு இருக்கிற எல்லாப்பயலுங்களையும் அழைக்கப்போறேன். அழைக்கக்காரணமா? தூக்கிப்போட்டு மிதிக்கிறதுக்குத்தான். அவனுங்களை எனக்குப் பிடிக்குதோ இல்லையோ.நான்தான் அவனுங்களை துரத்தி துரத்தி பிடிக்கணும்.

16.பிடித்த விளையாட்டு?

தூங்குற விளையாட்டு

17.கண்ணாடி அணிபவரா?

பைக் ல போறப்ப மட்டும் கருப்பு கண்ணாடி அணிவேன்.

18.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எனக்குப்பிடிச்சது டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் படங்கள் மட்டும்தான்.

19.கடைசியாகப் பார்த்த படம்?

பர்ஸ்ல இருக்கிற என்னோட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.

20.பிடித்த பருவ காலம் எது?

கோடைக்காலத்துல குளிர்காலம் பிடிக்கும். குளிர்காலத்துல கோடைக்காலம் பிடிக்கும்.

21.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நான் கொட்டாவி விடுறதுக்தே அலுப்பு படுவேன். படத்தை மாற்றினதே இல்லை. ரொம்ப அலுப்பா இருக்குங்க.

22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் – இட்லி குக்கர் சத்தம்.
பிடிக்காத சத்தம் – ‘இட்லி தீர்ந்துப்போச்சுடா’ என்கிற அம்மாவின் சத்தம்.

23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கல்லூரியில படிக்கிறப்ப டெல்லி போய்ட்டு வந்தேன். போறப்ப அளக்குறதுக்கு டேப் எடுத்திட்டு போகலையே.அதனால எவ்ளோ தொலைவுன்னு தெரியலங்க.

24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எனக்கு எந்த தனித்திறமையும் கிடையாது. கூட்டுத்திறமையும் கிடையாதுங்க.

25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னோட வலைப்பதிவைப்படிச்சிட்டு உம் முன்னு மூஞ்சியை வெச்சி இருக்கிறதை.

26 உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அது பாட்டுக்கு பேசாம தூங்கி கிட்டு இருக்கு. அதைப்போய் ஏங்க தட்டி எழுப்பறீங்க?

27. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மனுசப்பயலுங்க காலடி படாத காடு மலை அத்தனையும்.

28.எப்படி இருக்கணும்னு ஆசை?

‘நான் கடவுள்’ மாதிரி இருக்கணும்னு ஆசை.

29. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

கல்யாணம்தான்.

30.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்வுங்கறது ஒரு வால்வு மாதிரிங்க. தொறந்து இருந்தா வாழலாம். அடைச்சிகிட்டா போய் சேர வேண்டியதுதான்.

31..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

http://vidhoosh.blogspot.com/

எனக்கு அவங்க வலைப்பதிவிலேயே மிகவும் பிடிச்சது ‘பக்கோடா பேப்பர்கள்….’ ங்கற வலைப்பதிவோட தலைப்புல முதல் பாதிதான்.
(திங்கற சமாச்சாரமாச்சே.அதான். ஹி. ஹி).

32.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்த‌க‌ம்?

‘போலி சாமியார் ஆவது எப்படி?’ ங்கற புத்தகம்.
(சீக்கிரமா சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்னு முடிவு பண்ணிட்டேன். அதான்.)

விகடனில் வழுக்கி விழுந்தேன்!

‘வாழ்க்கையிலே வழுக்கி விழுவோம்!’

என்ற தலைப்பில் என்னுடைய படைப்பு விகடன்.காம் – ல் 24-06-2009 புதன்கிழமை அன்று வெளிவந்துள்ளது.

விகடனுக்கு நன்றி!

http://youthful.vikatan.com/youth/manipayalwit230609.asp

வாழ்க்கையிலே வழுக்கி விழுவோம்!

‘வாழ்க்கையில வழுக்கி விழுந்த ஒரு பெண்ணுக்கு நான் வாழ்க்கை கொடுக்கப்போறேன்’ என்றான் என் நண்பன் சக்கரை. (எத்தனை ‘ழ’?).

‘ஏண்டா. வாழ்க்கையில எல்லாருமே எப்பவாவது வழுக்கி விழுறது சகஜம் தானேடா. காலையில கூட நான் தின்னுட்டு தூக்கிப்போட்ட வாழைப்பழத்து தோலுல காலை வெச்சி நானே வழுக்கி விழுந்துட்டேன். வழுக்கி விழுறது ஒரு குத்தமாடா.?’ என்றேன் சக்கரையிடம்.

என்னைப்பொறுத்தவரை வழுக்கி விழுவதைக்காட்டிலும் மகிழ்ச்சியான ஒரு விசயம் இந்த உலகத்தில் வேறு கிடையாதுங்க.

ஒருநாள், பேருந்து நிறுத்தத்தில் கூட்டமாக அனைவரும் பேருந்தை எதிர்பார்த்து மிகவும் பதட்டத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு சிலர் வீட்டில் மனைவியிடம் திட்டு வாங்கிய சோகத்தில் இருந்தனர். இன்னும் சிலர் தாமதமானால் ‘வள்’லென்று குறைக்கும் மேனேஜர் பற்றிய பயத்தில் நின்று கொண்டிருந்தனர். ஒரு சில வாலிப வயோதிக கிழட்டு அம்மணிகள் தான் போட்ட மேக்கப் வியர்வையில் கலைந்து எங்கே தனது உண்மையான வயதை அடையாளம் காட்டிவிடுமோ என்ற அச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.

இப்படி அனைவரும் பதட்டத்துடனும் சோகத்துடனும் நின்றுகொண்டிருந்த போது பேருந்து வந்து நின்றது. பயணிகள் அனைவரும் சோக களையுடன் பேருந்தில் ஏற ஆரம்பித்தனர்.
பேருந்து புறப்பட ஆரம்பித்ததும் ஒரு கல்லூரி மாணவன் ஓடி வந்து ஏறுவதற்காக பேருந்தை துரத்தி வந்தான். அப்போது கீழே கிடந்த தர்பூசணி பழத்தில் கால் வைத்து விட்டான். சாலையில் வழுக்கிக்கொண்டே ஸ்கேட்டிங் பயணம் செய்து பேருந்து செல்வதற்கு முன்பாகவே அடுத்த பேருந்து நிறுத்தத்தை அடைந்து அங்கு நடுசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தில் மோதி முகத்தில் ரத்தஆறு வழிய கீழே விழுந்தான்.

இதைப்பார்த்த பேருந்து பயணிகள் அனைவரும் தங்கள் சோகத்தினை மறந்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

ஏன் இப்படி ஒருவர் வழுக்கி விழும்போது அதைப்பார்க்கும் அனைவரும் கைகொட்டி சிரிக்கின்றனர் என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.

அப்படி வழுக்கி விழும் நபர் எழுந்து நின்று தனக்கு எங்கே அடிபட்டது என்று பார்க்காமல் தன்னை யாராவது பார்த்து விட்டார்களா என்ற பயத்தில் சுற்றும் முற்றும் ஏன் பதட்டத்துடன் பார்க்கிறார் என்பதும் எனக்குப் புரிய வில்லை.

உண்மையில் வழுக்கி விழுந்ததற்காக அந்த நபர் முதலில் பெருமைப்பட வேண்டும்.

ஏனெனில் ஒருவர் வழுக்கி விழும்போது அங்கு நின்றுகொண்டிருக்கும் அனைவரையும் சோகத்தினை மறந்து சிரிக்க வைத்து விடுகிறார். ஆனால் உள்காயமாக அடி பட்டதினால் அவர் சோகமாகி விடுகின்றார். எனவே சுற்றியிருக்கும் அனைவரையும் சிரிக்க வைத்த அவருக்கு சிரித்த அனைவரும் சேர்ந்து ஏதாவது ஆறுதல் பரிசு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

வழுக்கி விழுவதினால் ஏற்படும் பயன்கள்:

1.சுற்றியிருக்கும் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விடுகிறோம்.

2.ஓசியில் சோடா கிடைக்க வாய்ப்பு உண்டு.

3.அதுவரை நம்மை ஏறெடுத்தும் பார்க்காத ஃபிகரும் நம்மை திரும்பிப்பார்த்து சிரிப்பாள்.

4.’பார்த்து நடக்கக் கூடாதா?’ என்ற பெருசுகளின் இலவச ஆலோசனைகள் கிடைக்கும்.

5.கதகளி மற்றும் குச்சிப்புடி போன்ற நடனங்களை நடுரோட்டில் ஆடி பழகுகிறோம்.

வழுக்கி விழ பயன்படும் பொருட்கள்:

1. வாழைப்பழத் தோல்.
2. தர்ப்பூசணி (அரைத் துண்டு).
3. சேறு.
4. தடைக்கற்கள்.
5. புல்.

வழுக்கி விழுவதில் பலவகைகள் உண்டு.அவையாவன:

1.மல்லாக்க வழுக்கி விழுதல்
2.குப்புற விழுதல்
3.ஒருக்களித்து விழுதல்

1.மல்லாக்க வழுக்கி விழுதல்

இவ்வகை பெரும்பாலும் வாழைப்பழத்தோலினாலேயே நிகழ்த்தப்படுகிறது.
வாழைப்பழத்தில் கால் வைத்தவுடன் ஸ்கேட்டிங் பயணத்தினை தொடங்கும் நபர் பின்னர் சிறிது தூரம் பயணித்ததும் வண்டியில்(தோலில்) பெட்ரோல்(வழுவழப்பு) தீர்ந்து விடும் சமயத்தில் தனது பயணத்தினை நிறுத்திவிட்டு மல்லாக்க சாய்ந்து தரையில் விழுந்து ஓய்வெடுக்க ஆரம்பித்து விடுவார்.

2.குப்புற விழுதல்

இவ்வகை பெரும்பாலும் தடைக்கற்களினாலும் உடல் மெலிந்தவர்களுக்கு புற்களினாலும் ஏற்படுகின்றது. அதனாலேயே ஈர்க்குச்சி போன்ற உடல் மெலிந்து காணப்படுபரை ‘புல் தடுக்கி பயில்வான்’ என நாம் அழைக்கிறோம். அதாவது புல் தடுக்கினாலே கீழே விழுந்து விடும் அளவிற்கு உடல் பலவீனமானவர் என்பது பொருளாகும்.

இவ்வகையில் வழுக்கிவிழும் நபர் ரிவர்ஸ் கியரில் சிறிது தூரம் பின்னோக்கி பயணம் செய்த பின்னரே கீழே விழுந்து தனது இலக்கை அடைகிறார்.

3.ஒருக்களித்து விழுதல்

இவ்வகையானது மது போதைகளினால் ஏற்படுகிறது. இவ்வகையில் வழுக்கி விழுபவர் காலைத்தடுக்கி விழச் செய்வதற்கு எந்தவகை பொருளும் கீழே கிடக்கா விட்டாலும் தனது சொந்தமுயற்சியினாலேயே ஒருக்களித்து விழுந்து ஓய்வெடுக்க தொடங்குகிறார்.

இவ்வளவு பெருமைகள் நிறைந்ததாக வழுக்கல் எனும் செயல் திகழ்கிறது.

எனவே,

வாழ்க்கையில் வழுக்கி விழுவோம்! அதைப் பார்ப்பவர் மகிழ்ச்சி அடைவோம்!!

வெளியிடுவோர்:

வாழ்க்கையில் வழுக்கி விழுவோர் நலச்சங்கம்.

பின்குறிப்பு:

இவ்வாறாக வாழ்க்கையில் வழுக்கி விழுந்து மற்றவர்களை மகிழ வைத்த எமது சங்கத்தின் உறுப்பினர் பலர் மூக்கு உடைந்தும் பற்கள் விழுந்தும் கைகால்களில் மாவுக்கட்டுப்போட்ட படியும் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் ஓய்வெடுத்து வருகின்றனர். அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கும் ஹார்லிக்ஸ் பாட்டில் செலவிற்கும் நிதியுதவி தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கிழமொழிகளும் மணிப்பயலின் மறுமொழிகளும்

•ஆற்றுல போட்டாலும் அளந்து போடு

சட்டையை இன் பண்ணினா மறக்காம ஜிப்பு போடு.

•ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

ஏட்டு வாங்கிய மாமுல் வீட்டுக்கு உதவாது.(நேரா பிரியாணி கடைக்குத்தானே போவாரு.)

•ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.

ஆபரேட் பண்ண தெரியாதவன் கம்ப்யூட்டர்ல வைரஸ் னு சொன்னானாம்.

•குரைக்கிற நாய் கடிக்காது

கடிக்கிற நாய் குறைக்காது.(வாயால கவ்விகிட்டு இருக்கறப்ப எப்படிய்யா குரைக்க முடியும்?)

•இடுக்கண் வருங்கால் நகுக

கடன்காரன் வந்தால் ஓடுக.

•ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

வீடு ரெண்டு பட்டால் வக்கீலுக்குக் கொண்டாட்டம்.

•காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

A.T.M க்குள்ள நிற்கும்போதே ஏ.சி காற்று வாங்கிக்கொள்.

•ஆழமறியாமல் காலை விடாதே.

ஓசியிலே கொடுக்கிறானேன்னு Credit Card வாங்காதே.

•குடிக்கிறது கூழ் கொப்புளிகிறது பன்னீர்.

மாத சம்பளம் ஆயிரத்து அய்நூறு. டூர் போக நினைச்சானாம் சிங்கப்பூரு.

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

Missed Call ஐ Dial பண்ணிப்பார்த்தால் அத்தனையும் Wrong Call.

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

ஆம்பள கறுத்தால் கிடைக்காது பெண்.

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

ஜலதோசம் பிடித்தவனுக்குத் தெரியுமா கூவம் வாசனை?

கவிதைகள்

ராசிக்கல்

கோடீஸ்வரன் ஆக ஆசைப்பட்டு

அணிந்துகொண்டேன் ராசிக்கல்லை. – இப்போது

கோடம்பாக்கம் ஓட்டலிலே

கழுவுகின்றேன் தோசைக்கல்லை.

வாஸ்து

வாஸ்து பார்த்து வீடு கட்டி

வாசலிலே பந்தல் வெச்சேன்.

தோஸ்து ஒருத்தன் ஏமாற்றி

நடுத்தெருவில் குந்த வெச்சான்.

காத்திருந்து காத்திருந்து….

உனக்காக காத்திருந்தேன்

சுங்குவார் சத்திரத்தில்.

உங்கப்பன் என்னைப் பிடித்து

தொங்கவிட்டான் உத்திரத்தில்.

கல்லூரிக் காதல்

உன் கூந்தல் மேகம் கண்டு

ஆடும் மயிலானேன்.

உனது வீட்டுத்தோட்டத்தில்

கூவும் குயிலானேன்.

உனையே நினைத்து படிக்காமல்

பரிட்சையிலே பெயிலானேன்.

போளிச்சாமியார் மணிப்பயல் சுவாமிகளும் போலிச்சீடர்களும்

மணிப்பயல் சுவாமிகள் தன்னைக்காண வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக போளி கொடுப்பது வழக்கம். தேம்பி அழும் பக்தர்களுக்கு தேங்காய் போளியை வாயில் திணித்து தேற்றி விடுவார். பணக்கட்டுகளுடன் வரும் பக்தர்களுக்கு பருப்பு போளியை பொட்டலம் போட்டு பாசமுடன் அளிப்பார். வெறுங்கையுடன் வரும் வெட்டிப்பக்தர்களின் வாயில் விபுதியை அள்ளித் தெளிப்பார்.

அதன் காரணமாக அவரிடம் போளி வாங்கி தின்று ருசி கண்ட பக்தகோடிகளால் போளிச்சாமியார் என்ற பெயரில் அன்புடன் அழைக்கப்பட்டார்.

போளிச்சாமியார் மணிப்பயல் சுவாமிகள் நீண்ட தாடியுடனும் சாமியார்களின் பொதுவான யூனிஃபார்ம் ஆன காவி உடையுடனும் கையில் கமண்டலத்துடனும் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

கமண்டலத்தில் இருக்கும் பொருளானது கால நிலைக்கேற்ப மாறுபடும். அதாவது குளிர் மற்றும் மழைக்காலங்களில் சூடான காபியும் கோடைக்காலத்தில் குளிர்பானங்களும் அதில் ஊற்றி நிரப்பப்பட்டிருக்கும். பக்தர்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் போது அவ்வப்போது சிறிது வாயில் கவிழ்த்துக்கொண்டு தாகசாந்தி அடைவார்.

அவ்வப்போது அவர் தரும் போளிகளுக்காகவும் கமண்டலத்தில் இருக்கும் காபிக்காகவும் அடிமையான சிலர் அவருக்கு சீடர்களாக மாறி அவருடைய ஆசிரமத்திலேயே தங்கியிருந்து அவருக்கு பணிவிடைகள் செய்து காலம் தள்ளினர்.
……தொடரும்…..

விகடனில் எனது படைப்பு

‘தொந்தியின் பயன்கள் : ஓர் ஆய்வு கட்டுரை’

என்ற தலைப்பில் என்னுடைய படைப்பு விகடன்.காம் – ல் 27-05-2009 புதன்கிழமை அன்று வெளிவந்துள்ளது.

விகடனுக்கு நன்றி!

http://youthful.vikatan.com/youth/manipayalstory27052009.asp

மக்குநாட்டு மன்னர் மணிப்பயலார்

‘ராஜாதி ராஜ! ராஜ மார்த்தாண்ட! ராஜகம்பீர! மக்குநாட்டு மன்னர் மணிப்பயலார் வருகிறார்! பராக்! பராக்! பான் பராக்!’

குத்தீட்டியை செங்குத்தாக பிடித்தபடி அமைச்சரவையின் வாயிலில் நின்ற காவலாளி அடி வயிற்றிலிருந்து அலறினான்.

மன்னர் மணிபயலார் கம்பீரமாக நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

‘மந்திரி குண்டுசவுரியாரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?’

‘மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ தெரியாது மன்னா. ஆனால் மக்கள் உங்கள் மீது வசைமாரி பொழிகின்றனர்’

‘நீர் என்ன சொல்கிறீர் அமைச்சரே?’

‘ஆம் மன்னா! நான் நகரில் வலம் வந்துகொண்டிருந்தபோது நாய்கள் துரத்தியதால் ஒரு குடிசை வீட்டின் ஓரமாக ஒளிந்துகொண்டிருந்தபோது ஒட்டுகேட்டேன். நாட்டில் மழைபொழிகிறதா இல்லையா என்பது கூட தெரியாமல் மன்னர் என்ன அரண்மனையில் அமர்ந்து கொண்டு மகாராணியாருக்கு மாவு ஆட்டி கொடுத்து கொண்டு இருக்கிறாரா? என்று குடிசைக்குள் குந்தி இருந்த சிலர் தங்களை ஏளனமாக எள்ளி நகையாடினர் மன்னா.’

‘மக்களை விட்டுதொலையும் மந்திரியாரே! அவர்கள் எக்கேடோ கெட்டு ஒழியட்டும் விடு. அந்தப்புரத்தில் அழகிகள் அனைவரும் நலம்தானே?’

‘மன்னர் மன்னா! தாங்கள் அரண்மனையின் அறைகளில் ஒட்டடை அடிப்பது, அரசியாரின் துணிமணிகளை அள்ளிப்போட்டு துவைப்பது போன்ற சொந்த வேலைகள் செய்து சோர்வடைந்து போவதால் அந்தப்புரம் சென்று ஆண்டுகள் பல ஆகிவிட்டது. அங்கே அந்தப்புரத்து அழகிகள் எல்லாம் அதரப்பழசான கிழவிகள் ஆகிவிட்டனர். உறைக்குள்ளேயே கிடந்து துருப்பிடித்த தங்களது உடைவாள் போல அறைக்குள்ளேயே அடைந்துகிடந்து நரைபிடித்த தலையுடன் நடமாடுகிறார்கள் மன்னா. பேரன் பேத்திகளை கொஞ்ச வேண்டிய வயதில் ஃபேரன் லவ்லி எனும் ஒரு பசையை முகத்தில் பூசிக்கொண்டு கேரம் விளையாடி நேரம் போக்குகின்றனர்.கட்டையில் போக வேண்டிய வயதில் மட்டைப்பந்து விளையாடி கொட்டமடிக்கின்றனர். முகடுகள் போல் கூன்விழுந்த முதுகுடன் இருந்துகொண்டு உதடுகளில் சாயம் பூசி உலா வருகின்றனர் மன்னா.’

‘அப்படியா? வியப்பாக உள்ளதே! அப்படியானால் அவர்கள் அனைவரையும் விருப்ப ஓய்வு திட்டத்தின்கீழ் வீட்டிற்கு அனுப்பிவிடு. போக மறுத்து அடம்பிடிக்கும் பொக்கைவாய் கிழவிகளை அப்படியே அலாக்காக அலுங்காமல் தூக்கிக்கொண்டுபோய் இடுகாட்டில் குழிதோண்டி இன்றே புதைத்துவிடு.’

*****************************************************

“பாரி, ஓரி, காரி, அதியன், ஆய், நள்ளி, பேகன் ஆகிய கடையெழு வள்ளல்கள் போல நானும் ஏதாவது வாரி வழங்கி எட்டாவது வள்ளலாக எனது பெயரும் வரலாற்றில் இடம்பெற உள்ளம் கிடந்து துடிக்கிறது. அதற்கு ஏதாவது ஆலோசனை இருந்தால் தெரிவியுங்கள் அமைச்சர் பெருமக்களே!”

“வள்ளலாக ஆவது பற்றி அப்புறம் யோசிக்கலாம். முதலில் எங்களது மூன்று மாத சம்பள பாக்கியை முழுமையாக கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள் மன்னா”

*****************************************************

‘தளபதி உருண்டை உப்பிலியாரே! நமது நாட்டின் எல்லையோரத்தில் நேற்றிரவு முதல் கூடாரம் அடித்து தங்கியிருக்கும் நாடோடிகள் பெரிய பெரிய இரும்புக் குழாய்களை தங்களோடு கொண்டு வந்துள்ளனரே! அதில் புட்டு சுட்டு நமது நாட்டில் விற்று துட்டு சம்பாதிப்பதற்காகவா?’

‘மன்னா! அவர்கள் நாடோடிகள் அல்ல. அவர்கள் எதிரி நாட்டு படை வீரர்கள். நமது நாட்டின் மீது படையெடுப்பதற்காக பதுங்கியுள்ளனர். அந்த இரும்புக்குழாய்கள் அரிசிமாவைக் கொட்டி அடுப்பில் வேகவைத்து புட்டு சுடும் குழாய்கள் அல்ல. அதில் வெடிமருந்தை கொட்டி பற்றவைத்தால் நமது நாட்டினை பஸ்பம் ஆக்கிவிடும் பீரங்கி எனும் பிரம்மாண்ட ஆயுதங்கள் மன்னா!’

‘ஆ! ஆபத்து! தளபதியாரே! உடனே வெள்ளைக்கொடிகளை தயார் செய்யுங்கள்!’

*****************************************************

http://manimscspl.blogspot.com/

இதப் படிங்க முதல்ல……..

போனாகானா முதலியாரின் தேசபக்தி

(அமரர் கல்கி எழுதிய சிறுகதைகள் சிலவற்றை படித்தவுடன் நானும் சிறுகதை எழுதிப்பார்த்துவிடுவது என முடிவு செய்து பேனாவை எடுத்து தாளில் கிறுக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு நீங்கள் படிக்கும் இந்த சிறுகதை!)

போனாகானா முதலியாரின் தேசபக்தி – சிறுகதை

(எழுதியவர் குமரர் குல்பி)

போனாகானா முதலியாருக்குச்சொந்தமான ‘சப்பாணி டாக்கீஸ்’ ஸினிமா கொட்டகை ஒரு காலத்தில் ரொம்ப பேமஸாயிருந்தது. சாயங்காலம் ஆறு மணி ஆகிவிட்டால் போதும். வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் கிராமவாசிகள் தங்களது வேலைகளை அப்படியே போட்டு விட்டு கொட்டகையை நோக்கி தலைதெறிக்க ஓடி வருவார்கள்.

(நிற்க. போனாகானா முதலியாரின் பெயர்க்காரணத்தை இங்கு நான் சொல்லவேண்டியுள்ளது. அவரது உண்மையான பெயர் இதை விடக்கேவலமானது என்பதால் அப்பெயரை உங்களுக்கு நான் சொல்லப்போவதில்லை.

போனாகானா என்பதன் முழுப்பெயர் பொட்டுக்கடலை என்பதாகும்.

ஒரு நாள் முதலியாரின் மனையாள் இவரை சட்னி அரைப்பதற்கு பொட்டுக்கடலை வாங்கிவரும்படி மளிகைக்கடைக்கு அனுப்பினாள். பொட்டுக்கடலை வாங்கிக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்த முதலியார் வீடு போய்ச் சேர ரொம்ப நேரம் ஆகும் என்பதால் பொழுதுபோவதற்காக பொட்டலத்தைப் பிரித்து பொட்டுக்கடலைகளை வாயில் போட்டு அரைக்க ஆரம்பித்தார். வீடு வந்து சேர்ந்ததும் பொட்டலத்தினை மனைவியின் கையில் கொடுத்தார். வெறும் பொட்டலம் மடித்த தாள் மட்டுமே அவளது கையில் இருந்தது. பொட்டுக்கடலை அனைத்தும் முதலியாரின் தொப்பையில் நிறைந்தது. கோபமடைந்த அவரது மனையாள் அவரை நடுத்தெருவில் இழுத்துப்போட்டு பூரிக்கட்டையினால் நையப் புடைத்து எடுத்து விட்டாள். அவரது ‘ஆ! அய்யோ!’ என்ற அலறல் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டுகாரர்கள், அவரது இந்த கேவலமான செயலை அறிந்து அதை வெளி உலகிற்கு நேரடி நிகழ்ச்சியாக ஒலிபரப்பினார்கள்.ஒரு சிலர் பக்கத்து ஊருக்கு பஸ் ஏறிப்போய் பரப்பினார்கள்.

அன்று முதல் போனாகானா முதலியார் என்ற சங்கேத பெயரில் ஊர் மக்களால் அவர் அழைக்கப்பட்டார்.)

அந்தக்காலத்தில் சினிமா கொட்டகையில் டாக்கி படம் முடிந்ததும் தேசகீதம் பாடவிடுவார்கள். உடனே ஜனங்கள் அனைவரும் மவுனமாக எழுந்து நின்று அந்த பாடல் ஒலித்து முடியும் வரை மரியாதை செலுத்துவார்கள். நாளடைவில் மக்களுக்கு ஒரே பாடலை திரும்ப திரும்ப கேட்டதால் அலுத்துப்போயினர். அதனால் டாக்கி படம் முடிந்ததும் உடம்பை ஒரு நெளிவு எடுத்து சோம்பல் முறித்துக்கொண்டு அந்த கொட்டகையில் ஒரு கொட்டாவியை விட்டுவிட்டு நடையைக்கட்ட தொடங்கினார்கள்.

ஜனங்களின் இந்த நடவடிக்கைகள் கண்டு போனாகானா முதலியார் மிகவும் மனம் வருந்தினார்.

‘இந்த லோகத்திலே தாய் நாட்டுக்கு மரியாதை செலுத்த அலுப்பு கொண்டவனும் ஒரு மனுசனா? ச்சே. என்ன சனங்கள் இதுகள்’ என்று இவர் ரொம்ப அலுத்துக்கொண்டார்.

உடனே ரொம்ப நாட்கள் தன்னுடைய புத்தியை கசக்கி அந்த முட்டாள் ஜனங்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக ஓர் உபாயம் செய்தார்.

அதன்படி ஜில்லாவிலிருந்து விஞ்ஞானி ஒருவரை வரவழைத்து சனங்களின் தேசாபிமானம் குறைந்ததை அவரிடம் கூறி கதறி அழுதார்.

அந்த விஞ்ஞானி போனாகானா முதலியாரின் கண்ணீரினை துடைத்து விட்டு கூறினார்.
‘கவலைப்படாதீங்கோ முதலியார். இதுக்கு நான் ஒரு பரிகாரம் பண்றேன். ஆனா அதுக்கு கொஞ்சம் செலவு ஆகும்.’

உடனே உற்சாகமாய் துள்ளி எழுந்த முதலியார் ‘அதுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இந்த முட்டாள் சனங்களுக்கு பாடம் கற்பிக்கணும்’ என்று உறுமினார்.

திட்டம் தயாராயிற்று.

அதன்படி,’சப்பாணி டாக்கீஸ்’ சினிமா கொட்டகையின் ஒவ்வொரு நாற்காலியின் மேலும் ஒரு இரும்பு கூண்டு தொங்கவிடப்பட்டது.

படம் முடிந்து தேசியகீதம் ஒலிக்க ஆரம்பித்ததும் கானாபோனா முதலியாரின் திட்டத்தினை அறியாத சனங்கள் வழக்கம்போல் சோம்பல் முறித்துக்கொண்டு நாற்காலியை விட்டு எழ முயன்றபோது அந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த போனாகானா முதலியார் குடுகுடுவென ஓடிப்போய் ஒரு பொத்தானை அழுத்தினார். உடனே நாற்காலிகளின் மேல் தொங்கிக்கொண்டிருந்த இரும்புக்கூண்டுகள் சடாரென கீழிறங்கி அனைவரையும் சிறைபடுத்தியது.அதிர்ச்சியில் சனங்கள் எழுந்து நின்றனர். ஆனால் தேசியகீதம் ஒலித்து முடியும் வரை யாராலும் நகரகூட முடியவில்லை.

தேசியகீதம் ஒலித்து முடித்ததும் போனாகானா முதலியார் மீண்டும் ஒரு பொத்தானை அழுத்தினார்.உடனே அனைத்து கூண்டுகளும் மேல் நோக்கி பறந்து சனங்கள் விடுபட்டனர்.

இப்படியாக போனாகானா முதலியார் தேசாபிமானத்தினை சனங்களுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டினார்.

சில நாட்கள் கழித்து போனாகானா முதலியார் மீண்டும் வருந்தும்படியாக மக்கள் நடந்து கொள்ள ஆரம்பித்தனர்.

அதாகப்பட்டது, கூண்டுக்குள் அடைபட்டதும்; தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்தபடியே கூண்டு திறக்கப்படும்வரை ஒரு சிலர் ஒரு குட்டித்தூக்கம் போட ஆரம்பித்தனர். ஒரு சிலர் பக்கத்து கூண்டினில் அடைபட்டிருந்த மனிதரிடம் பார்த்து முடித்த அந்த டாக்கி படத்தினைப்பற்றி விவாதம் பண்ண ஆரம்பித்தனர். ஒரு சிலர் சட்டைப்பையிலிருந்த கோழி இறகினை எடுத்து காது குடைய ஆரம்பித்தனர்.

இதுகண்டு மனம் வருந்திய போனாகானா முதலியார் மீண்டும் அந்த விஞ்ஞானிக்கு கடிதம் எழுதி வரவழைத்தார்.

சனங்களின் இந்த அட்டகாசத்தினை விலாவாரியாக கேட்டறிந்த அந்த விஞ்ஞானி மீண்டும் சில நவீன கருவிகளை அந்த டாக்கி கொட்டகையில் பொருத்தினார்.

மறுநாள் டாக்கி படம் முடிந்து வழக்கம்போல தேசியகீதம் பாட ஆரம்பித்ததும் கானா போனா முதலியார் ஓடிப்போய் அந்த பொத்தானை அழுத்தி சனங்களை சிறைபிடித்தார். உள்ளே எட்டிப்பார்த்த முதலியார் அனைத்து சனங்களும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு மேற்படி சொல்லப்பட்ட செயல்களை செய்ய ஆரம்பித்ததைப்பார்த்துவிட்டு ஒரு நமுட்டுச்சிரிப்பு சிரித்தபடியே இன்னொரு பொத்தானை அழுத்தினார்.

உடனே நாற்காலிகளில் அந்த விஞ்ஞானியால் பொருத்தப்பட்டிருந்த ஆணிகள் திடீரென முளைத்தன. அமர்ந்திருந்த சனங்களின் பின்புறத்தினை துளைத்தன. அரைத்தூக்கத்திலிருந்த சனங்கள் ‘ஆ’ என அலறியபடி எழுந்து நின்றனர்.

(இவ்வாறு ஆணிக்குத்து பட்ட அப்பாவி மக்கள் மல்லாக்கப்படுக்க முடியாமல் ஒரு மாதத்திற்கு ஒருக்களித்து மட்டுமே படுத்து உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.)

இவ்வாறாக சில காலம் உருண்டோடியது. சனங்களும் அந்த ஊரில் வேறு சினிமா கொட்டகை இல்லாதலால் போனாகானா முதலியாரின் இந்த கொடுஞ்செயலை பொறுத்துக்கொண்டு படம் பார்க்க பழகிக்கொண்டனர்.

சில நாட்கள் கழித்து அதே ஊரில் இன்னொரு பிரம்மாண்டமான டாக்கி கொட்டகை ஒன்று ‘ஜாலி டாக்கீஸ்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த புதிய ஸினிமா கொட்டகை பற்றி ஜட்கா வண்டியில் மைக்செட் கட்டிக்கொண்டு பின்வருமாறு விளம்பரம் செய்துகொண்டு போனார்கள்.

‘எங்களது ‘ஜாலி டாக்கீஸ்’ சினிமா டாக்கி கொட்டகையில் ஆணி கிடையாது. கூண்டு கிடையாது. அவ்வளவு ஏன்? நாற்காலியே கிடையாது. அனைவரும் தரையில் சம்மணம் போட்டபடி நிம்மதியாக படம் பார்க்கலாம். அலுப்பாக இருந்தால் அப்படியே மல்லாக்க சாய்ந்து தூங்கலாம். அனைவரும் வாருங்கள் ஆணி குத்து வாங்காமல் செல்லுங்கள்.’

மேற்படி விளம்பரம் கண்ட சனங்கள் படம் பார்ப்பதற்கு அந்த சினிமா கொட்டகைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

அதன்பிறகு போனாகானா முதலியாரின் ‘சப்பாணி டாக்கீஸ்’ பக்கம் யாரும் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.

தனிமையில் தனது டாக்கி கொட்டகையில் அமர்ந்து புலம்பிக்கொண்டிருந்த போனாகானா முதலியார் அந்த ‘ஜாலி டாக்கீஸ்’ முதலாளியைப்பார்த்து ‘என்யா இப்படி சனங்களை கெடுக்கறீர்’ என்று சண்டையிட தீர்மானித்து ‘ஜாலி டாக்கீஸ்’ சென்று அங்கிருந்த முதலாளியின் அறையை திறந்தார். அங்கு அவர் கண்ட காட்சி போனாகானா முதலியாருக்கு ஆயிரம் பதினாயிரம் லட்சம் ஆணிகள் தனது பின்புறத்தில் குத்தப்பட்டதுபோல அதிர்ந்து போனார். காரணம் அந்த முதலாளி நாற்காலியில் நமட்டுச்சிரிப்புடன் அமர்ந்திருந்தார் அந்த விஞ்ஞானி.

(பின்குறிப்பு: பிற்காலத்தில் துரதிஷ்டவசமாக முதலமைச்சர் பதவியை அடைந்த போனாகானா முதலியார் அந்த விஞ்ஞானியை தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்தார் என்பதனை அறிக.)

எங்க ஊரு அதிசய மனிதர்கள்

                    டாக்டர் டக்கு பாப்பா

டாக்டர் டக்கு பாப்பா ஒரு புகழ் பெற்ற போலி டாக்டர். இவர் காலை ஏதாவது ஒரு கிராமத்திற்கு மருத்துவ பணி செய்ய கிளம்புவார். மாலை நெருங்குவதற்குள் பலரின் கதையை முடித்த திருப்தியுடன் ஊர் திரும்புவார்.
தீபாவளி வந்து விட்டால் போதும். இவர் ஒரே நிறத்தில் ஒரு துணியை பல கிலோ மீட்டர் நீளத்திற்கு வாங்கி செல்வார். அவருடைய பேவரைட் கலர் கிளிப்பச்சை மற்றும் ரோஸ்.
அந்த துணியிலேயே குடும்பத்திற்கே உடைகள் தைத்து விடுவார். அவர் குடும்பத்துடன் வெளியில் வரும்போது பச்சைக்கிளிகள் கூட்டமாக கூட்டை விட்டு பறந்து செல்வது போல இருக்கும்.
தீபாவளியன்று அவருடைய குடும்பம் தின்னும் பலகாரங்களைத் தவிர மற்ற அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும்.
அவர் எந்த நிறத்தில் உடை அணிகிறாரோ அதே நிறத்தில் உள்ள மாத்திரைகளை மட்டுமே அன்றைய தினம் அவரிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் வழங்குவார்.

 

                          மெக்கானிக் மணி

இவர் வாரத்தில் முன்று நாட்கள் மட்டுமே கடையைத் திறப்பார்.மற்ற நாட்களில் டி.வி சீரியல்கள் பார்த்து அழுது கொண்டிருப்பார்.

நம்பினால் வெம்புங்கள்

நாய் விற்ற காசு குறைக்காது என்பார்கள். Zee தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் பேய் விற்று காசு சம்பாதிக்க நினைக்கிறது. தூக்கம் கண்களை தழுவும் இரவு நேரம் 9.30 மணிக்கு ‘நம்பினால் நம்புங்கள்’ என்ற ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது.

அதில் ஒரு வயது முதிர்ந்த கிழவர் மண்வெட்டியுடன் வேலை வெட்டியை பார்க்க வயலுக்கு மெதுவாக நொண்டியபடி நடந்து செல்கிறார். அவரை ஒரு கேமரா கண்டபடி நடுங்கியபடி கூடவே ஒரு பயங்கரமான இசையுடன் பின்தொடர்கிறது. ஒருவேளை கேமராமேனுக்கு நரம்புதளர்ச்சியா அல்லது இவர்கள் படப்பிடிப்பு நடத்தும் இடங்களில் பேய்கள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ தெரியவில்லை.

அப்படியே கேமரா அந்த கிழவனை சுற்றி வந்து நேராக அவரது முகத்திற்கு அருகில் செல்கிறது. அவரிடம் பேட்டி ஆரம்பமாகிறது.

‘இந்த ஊர்ல பேய்கள் நடமாடுறதா பேசிக்கிறாங்களே. நீங்க பார்த்து இருக்கீங்களா பெரியவரே?’

உடனே அந்த கிழவர்

‘இங்க பேயும் இல்ல. ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஏன்யா! இத தெரிஞ்சிக்கத்தான் வேலை மெனக்கெட்டு ஒரு காரை எடுத்துகிட்டு நாலைஞ்சு பேர் கௌம்பி வந்தீங்களா? அட வெங்காயங்களா!’ என கேட்பார் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்.

ஆனால் அவர் உங்களைப்போல முட்டாள் இல்லை. அப்படி சொன்னால் தன்னுடைய மூஞ்சியை அந்த டி.வி பொட்டியில காட்டுவாங்களா? அந்த பெரியவர் என்ன பெரியாரா அப்படி சொல்லி வாய்ப்பை நழுவ விடுவதற்கு?

உடனே அந்த கிழவர் பேட்டியை ஆரம்பிக்கிறார்.

‘ஆமாம் தம்பி. ராத்திரி ஆயிடிச்சின்னா பேய்கள் நடமாட ஆரம்பிச்சிடுது. நான் பார்த்திருக்கேன்.’

‘பேய்களோட உருவம் எப்படி இருக்கும் பெரியவரே’

‘அது சில சமயம் நாய் உருவத்திலே ரோட்டுல குறுக்கே ஓடும். சில சமயம் பாம்பு வடிவத்தில போய்கிட்டு இருக்கும். அப்புறம் சில சமயத்துல பூனை மாதிரி சந்துபொந்துல ஒடிக்கிட்டு இருக்கும்.நான் இந்த பேய்களை பல வருசமா இப்படி பார்த்துக்கிட்டு இருக்கேன் தம்பி. அது பேசாம போய்கிட்;டு இருக்கும். அதை யாராவது தீண்டினா உயிரை எடுத்திட்டு போய்டும்.’

உடனே ஒரு பின்னனி குரல் பயங்கர இசையுடன் பேச ஆரம்பிக்கும்.

‘அந்த பெரியவர் சொன்னதைக்கேட்டு நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். அந்த பேய்களை நாமும் பார்;த்துவிடுவது என்று முடிவெடுத்து அன்று இரவு முழுவதும் அந்த கிராமத்தின் ஒதுக்குப்புறமான ஒரு புதரில் பதுங்கியபடி காத்திருந்தோம்.’

நள்ளிரவு நேரம். படப்பிடிப்பு குழுவினர் நான்கைந்து பேர் அந்த கும்மிருட்டில் ஒரு குப்பை மேட்டின் மேல் அமர்ந்து தூக்கக் கலக்கத்துடன் காத்திருக்கின்றனர் அந்தப்பேயைப் பார்த்துவிடும் தீர்மானத்துடன் மற்றும் அந்தப்பேயை படமெடுத்து ஒளிபரப்பி நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கு உதவும் சேவை மனப்பான்மையுடன். குப்பை மேட்டில் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவர் முகத்தினையும் அந்த நரம்புதளர்ச்சி கேமரா லேசான வெளிச்சத்தில் மாறி மாறி காட்டுகிறது.

அனைவரின் முகமும், சந்திராயன் விண்கலம் மேலெழும்பியபொழுது இருந்த மயில்சாமி அண்ணாதுரையின் முகபாவத்துடனும், பொக்ரான் அணுகுண்டு வெடிப்பதற்கு முன் இருந்த அப்துல் கலாமின் முகபாவத்துடனும், உலகின் முதல் பல்பு எரிவதற்கு முன் இருந்த எடிசனின் முகபாவத்துடனும் ஏதோ ஒரு அதிசய கண்டுபிடிப்பினை நிகழ்த்தப்போகும் ஆர்வத்துடன் தெரிகிறது.

திடீரென தூரத்தில் ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்கிறது. உடனே கேமராவானது குரைப்பு சத்தம் வந்த திசையை நோக்கி மூச்சிறைப்பு வாங்க ஓடுகிறது. அங்கு ஒரு நாய் நின்றுகொண்டு கீழே கிடந்த ஒரு எச்சில் இலையை நக்கிக்கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பு கும்பலைக் கண்டதும் ‘ஆகா இவனுங்களும் நம்ம டின்னரை பங்கு கேட்க வந்துட்டானுங்கய்யா! வந்துட்டானுங்கய்யா!!’ என எண்ணியபடி இவர்களைப்பார்த்து உருமுகிறது.

பின்னனி குரல் கடைசியாக இப்படி பேசி முடிக்கிறது.

‘அந்த பெரியவர் சொன்னது போல் இரவில் நாய் உருவத்தில் திரிந்த அந்த பேயைப் பார்த்த அதிர்ச்சியுடன் நாங்கள் அந்த கிராமத்திலிருந்து திரும்பினோம்….. நம்பினால் நம்புங்கள்’

ஆகா! என்ன ஒரு காணக்கிடைப்பதற்கரிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி!

மத்திய அரசு உடனே தலையிட்டு அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஏதாவது ஒரு தேசிய விருது அல்லது குறைந்தபட்சம் ஒரு வெண்கலக்கிண்ணமாவது கொடுத்து கவுரவித்து, மக்களுக்கு விழிப்புணர்ச்சி மற்றும் பகுத்தறிவை வளர்க்கக்கூடிய இத்தொடரை தயாரிப்பதற்கு மேன்மேலும் ஊக்கமளிக்க வேண்டும்.

மேலும், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் மக்கள் யாரும் தூங்கிவிடாமல் கட்டாயமாக அந்த தொடரை பார்த்து விட்டுத்தான் தூங்க வேண்டும் என்று ஒரு அவசர சட்டத்தினை முன் தேதியிட்டு இயற்ற வேண்டும். ஒரு வேளை அந்தத்தொடரை பார்க்காமலே தூங்கிவிடும் தேசத்துரோகிகளை நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி உடனே தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும்.

ஒரு நாள், நானும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நாய் வடிவில் வந்த அந்தப்பேயை பார்த்த மகிழ்ச்சியில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்துவிட்டு தூங்க நினைத்தபோது, அதே தொலைக்காட்சியில் அடுத்த நிகழ்ச்சியாக பழைய பாடல் ஒன்று ஒளிபரப்பானது.

‘வேப்பமர உச்சியில் நின்னு பேயென்னு ஆடுதுன்னு
விளையாடப்போகும்போது சொல்லி வைப்பாங்க.
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க.
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே.
நீயும் வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே.’

உண்மையிலேயே வேலையற்ற வீணர்கள் யாரென்றால் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியினைப்பார்த்த நானும், அதை விமர்சித்து நான் எழுதிய இந்தக் கட்டுரைரையை வேலை மெனக்கெட்டு படித்துக்கொண்டிருக்கும் நீங்களும்தான்.

மணிப்பயலும் சில மத்தாப்புகளும்

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன.

மணிப்பயலும் குண்டுசவுரியும் வழக்கம் போல கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தனர்.

கணக்கு வாத்தியார் அணிகள் பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.
கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த குண்டுசவுரி திடீரென தன் புத்த பையில் கையை விட்டு ஒரு பொட்டலத்கை கையில் எடுத்தான்.அதில் இருந்த ஒரு முறுக்கை எடுத்து மணிப்பயலிடம் கொடுத்தான்.

“டேய் மணி! இந்தாடா முறுக்கு. சத்தம் போடாம சாப்பிடு. “

மணிப்பயல் அந்த முறுக்கை எடுத்து கடித்தான். உண்மையிலேயே கடித்து சாப்பிடும் சத்தம் வாயிலிருந்து வரவேயில்லை. காரணம் அது போன வருடம் தீபாவளிக்கு சுட்ட நமுத்துப்போன முறுக்கு.

மணிப்பயலுக்கு அந்த முறுக்கை தின்றவுடன் வயிற்றுக்குள் கிரைண்டர் ஓடுவது போல தோன்றியது. தலை லேசாக கிறுகிறுத்தது.

“டேய் குண்டு! என்ன எழவுடா திங்க குடுத்த? எனக்கு மயக்கம் வர்றது போல இருக்குடா “

 

“டேய் மணி! நான் நல்ல முறுக்குதாண்;டா குடுத்தேன். முறுக்கு சுட்டு கொஞ்சம் லேட்டாயிடுச்சிடா. அதான் லேசா நமுத்துப்போச்சி. போசாம சாப்பிடு கணக்கு வாத்தியான் நம்மளை பாக்குறான் “
குண்டுசவுரி ரொம்ப நல்லவன். மணிப்பயல் மேல் ரொம்பவும் பாசமாக இருப்பான். அதே நேரத்தில் எந்த பொருளையும் வீணாக்கக்கூடாது என்ற கொள்கையுடையவன். அதனாலேயே போன வருடம் சுட்டு மீந்துப்போன முறுக்கை வீட்டில் உள்ள அவனது கிழவி எலிகளைக் கொல்வதற்காக மொட்டை மாடியில் வீசியெறிந்ததை கொண்டு வந்து மணிப்பயலிடம் கொடுத்தான்.

“ பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பழமொழிக்கேற்ப பழைய முறுக்கை மணிப்பயலிடம் கொடுத்து (அதனை மணிப்பயல் தின்றதனால் நான்கு நாட்களாக கலிந்து கொண்டிருந்த விசயம் அவைக்குறிப்பிலுருந்து நீக்கப்படுகிறது) புத்தகப்பையில் வைத்திருந்த இன்னொரு பொட்டலத்தை பிரித்து அதிலிருந்த நேற்று சுட்ட நல்ல மொறு மொறு முறுக்கை எடுத்து தனது வாயில் புகுத்தினான்.

முறுக்கு மிகவும் சுவையாக இருந்ததால் குண்டுசவுரி தன்னை மறந்து நறநறவென கடித்து திங்க ஆரம்பித்தான்.
போர்டில் எழுதிக்கொண்டிருந்த கணக்கு வாத்தியார் எழுதுவதை திடீரென நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தார். வகுப்பறை அமைதியானது. வாத்தியார் மெல்ல நடந்து கடைசி பெஞ்ச் அருகே வந்தார்.

‘ ஏதோ திங்கற மாதிரி சத்தம் வந்ததே.’

என்றபடி அனைவரது முகங்களையும் பார்த்தார்.

தான் முறுக்கை கடித்து தின்றது வாத்தியார் காதில் விழுந்துவிட்டதை நினைத்து குண்டுசவுரி அதிர்ச்சியில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அமர்ந்திருந்தான்.

‘இப்ப சத்தம் வரலியே. ஒருவேளை மனப்பிராந்தியா இருக்குமோ.?’

என்று குழம்பியபடி வாத்தியார் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

முறுக்கு சுவையின் கிறக்கத்தில் லயித்திருந்த குண்டுசவுரி முறுக்கை மீண்டும் நறநறவென மெல்ல ஆரம்பித்தான்.சடாரென திரும்பிய கணக்கு வாத்தியார் குண்டுசவுரியின் உச்சி முடியைப்பிடித்து தூக்கினார்.

“என்னடா பண்ணிகிட்டு இருக்கே?.”

“சார்! பாடத்தை கவனிச்சிகிட்டு இருக்கேன் சார்!.”

“அப்ப நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு. அணிகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?”

“அது வந்து சார்.. வந்து… வந்து.. இரண்டு வகைப்படும் சார். “

“சொல்லு.பார்ப்போம்”

“இளைஞரணி சார் இன்னொன்னு மகளிரணி சார்.”

“அப்படியா?. சரி. கோணத்தை அளப்பது எப்படி?”

“எனக்குத் தெரிஞ்சி கும்பகோணத்தை சர்வேயர்தான் சார் அளந்தாரு”

கோபமடைந்தார் வாத்தியார்.

“ஏண்டா பொறுக்கிப்பயலே. நானே ரொம்ப குழம்பிப்போய் பாடம் நடத்திகிட்டு இருக்கேன். உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா முறுக்கு தின்னுகிட்டு இருப்பே?”என்றபடி முடியைப்பிடித்து குனிய வைத்து முதுகில் ‘சொட்டீர்” என அடித்தார்.
குண்டுசவுரியின் தண்டுவடத்தில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தாக்கியது போல ‘அய்யோ!” என்று அலறினான்.

அப்போது மிக்ஸியில் பாதி அரைபட்ட தேங்காய் சட்னியை கொட்டியது போல அவன் வாயிலிருந்து முறுக்குத்துகள்கள் கொட்டின.

பள்ளி முடிந்தது. மணிப்பயலும் குண்டுசவுரியும் சோகமாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.

“டேய் குண்டு! வலிக்குதாடா?”

“டேய் மணி! நக்கலா? அடி வாங்குனதை பார்த்திட்டு கேட்கறியா கேள்வி? அந்த வாத்திப்பய டெய்லி காலையில நாப்பது பச்சை முட்டையை குடிச்சிட்டு தண்டால் எடுப்பார்னு கேள்விப்பட்டிருக்கேன். இன்னைக்குதாண்டா நம்பினேன். என்னா அடீ. எப்பப்பா! ஒரு நிமிசம் கண்ணே தெரியலடா. டேய் அந்தாளு என்னை கவனிக்கிறார்னு என்கிட்டே ஏண்டா சொல்லல நீ? “

“டேய் குண்டு! அந்தாளு ஒன்றரை கண்ணான்னு உனக்கு தெரியாதா? அந்த ஆளு உன்னை பார்த்தப்ப அவர் மேல ஃபேன் ஓடுறதை பார்க்கிறார்னு நெனைச்சிட்டு இருந்திட்டேன்டா.சரி விடுடா. அடி வாங்குறதெல்லாம் நமக்கு சகஜம்தானே. டேய் குண்டு! நம்ம கோவிந்தன் மவன் சிங்காரம் இருக்கானே அவன் பட்டாசு கடை போட்டு இருக்கானாம். வா போய் பார்ப்போம்.”

இருவரும் சிங்காரம் கடையை நெருங்கினார்கள். கடையில் மிகவும் கூட்டம் அலைமோதியது.
குண்டுசவுரி கூட்டத்தை விலக்கி விட்டு சிங்காரம் அருகே நெருங்கினான்.

“யோவ் சிங்காரம்! பாம்பு மாத்திரை இருக்குதா? “

“இருக்குது. எத்தனைடா வேணும்? “

“நூறு குடு “

“எதுக்குடா அவ்ளோ மாத்திரை கேட்கிறே?”

“ம்..? ஒப்பன் கோவிந்தனுக்கு வயித்தால போகுதாம். அவனுக்கு வைத்தியம் பாக்குறதுக்கு. கேட்கிறதை குடுய்யா “

“அடி செருப்பால. அவ்ளோ திமிர் வந்துடுச்சா உனக்கு?”

என்றபடி சிங்காரம் குண்டுசவுரியை துரத்த ஆரம்பித்தான்.
குண்டுசவுரி வேகமாக ஓட ஆரம்பித்தான். உடனே சிங்காரம் ஒரு வெங்காய வெடியை எடுத்து குண்டுசவுரியை நோக்கி வீசினான்.
வெங்காய வெடி பறந்து வந்து புறமுதுகிட்டு ஓடிக்கொண்டிருந்த குண்டுசவுரியின் டவுசரில் பட்டு வெடித்தது.
வெடித்த வேகத்தில் டவுசரின் பின்புறம் கிழிந்து உடனடி தபால் பெட்டி உருவானது.
ஓடிக்கொண்டிருந்த குண்டுசவுரி குளிர்ந்த காற்றானது தனது பின்புறம் வீசுவதை உணர்ந்து கையால் தடவிப்பார்த்தான். டவுசர் கிழிந்திருப்பதை அறிந்து மிகவும் கோபமுற்றான்.

“யோவ் சிங்காரம்! என்னையா அவமானப்படுத்துறே? உன்னை பழி வாங்காம விடமாட்டேன்டா.”
என்று சவால் விட்டபடி கிழிந்த பகுதியை தனது கைகளால் மறைத்தபடி ஓடி வந்து வீடு வந்து சேர்ந்தான்.வீட்டில் தனியாக அமர்ந்து சிங்காரத்தை பழி வாங்குவதை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தான் குண்டுசவுரி. அப்போது அங்கு மணிப்பயல் வந்தான்.
“டேய் குண்டு! என்னடா யோசிக்கிறே?”
“டேய் மணி! அந்த வாத்திப்பயலை அப்புறம் கவனிச்சிக்கிறேன். முதல்ல சிங்காரம் பயலை பழி வாங்கனும் அதுக்கு ஏதாவது ஐடியா சொல்லுடா.”
“டேய்! என்கிட்ட ஒரு அருமையான ஐடியா இருக்கு. காதை கிட்ட கொண்டு வா சொல்றேன்”
குண்டுசவுரி தனது காதை மணிப்பயலின் வாயருகே நீட்டினான். மணிப்பயல் தனது சதித்திட்டத்தை சொல்ல ஆரம்பித்தான்.
அன்று இரவு சிங்காரம் கடை எதிரே உள்ள சந்தினுள் இருட்டில் மணிப்பயலும் குண்டுசவுரியும் பதுங்கினர்.
எதிரே சிங்காரம் கடையில் பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சிங்காரம் கொட்டாவி விட்டபடி அமர்ந்திருந்தான்.
மணிப்பயல் தனது கையிலிருந்த மஞ்சள் பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்தான். அந்த பாட்டிலில் ஒரு ராக்கெட் வெடியை சொருகி சிங்காரம் கடையை நோக்கி பிடித்துக்கொண்டான்.உடனே குண்டுசவுரி தீப்பெட்டியை எடுத்து ராக்கெட் வெடியை பற்றவைத்தான்.
ராக்கெட் வெடியானது புகையை கக்கிய படி பறந்து சென்று தனது இலக்கான சிங்காரம் கடையை துல்லியமாக தாக்கியது.
உடனே பட்டாசுகள் பாம்புமாத்திரைகள் ராக்கெட் வெடிகள் சங்குசக்கரங்கள் புஸ்வானங்கள் ஆகியவை வெடிக்க ஆரம்பித்தது.
கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த சிங்காரத்தின் வாயில் ஒரு யானை வெடி விழுந்து வெடித்தது.
தலைமேல் ஒரு சங்கு சக்கரம் சுற்றியது.
காலடியில் பாம்பு மாத்திரைகள் படமெடுத்தன.
தப்பிப்பதற்காக சிங்காரம் கடையை விட்டு ஓட ஆரம்பித்தான்.
அப்போது கும்பலாய் துரத்தி வந்த ராக்கெட் வெடிகள் அவனது வேட்டியில் புகுந்து பறித்துக்கொண்டு வானம் நோக்கி வேட்டியுடன் பறக்க ஆரம்பித்தன.
வேட்டியுடன் சேர்ந்து அவனது மானமும் காற்றில் பறந்தது.
அப்போது அந்த வழியாக வந்துகொண்டிருந்த கோவிந்தன் நீண்ட நாட்களாய் காணாமல் போன தனது அண்டர்வேரை தனது மகன் சிங்காரம் அணிந்து கொண்டு ஓடுவதை கண்டு கோபமுற்று கையில் தடியுடன் சிங்காரத்தை துரத்திக்கொண்டு பின்னால் ஓடினார்.
எதிரியை பழி வாங்கிய மகிழ்ச்சியில் மணிப்பயலும் சிங்காரமும் வீடு திரும்பினர்.
இவ்வாறாக குண்டு சவுரி மற்றும் மணிப்பயலின் அந்த வருட தீபாவளி இனிதாய் கழிந்தது.

திருக்குறள்

எழுதியவர் : திரு லொள்ளு வர்

திருக்குறள் 1:

விற்க வீடு, குண்டான் சட்டிகளை. விற்றபின்
நிற்க நடுத்தெருவில்

திருக்குறள் 2:

மாடுபோல் வளர்ந்தோர் வாழ்வாங்கு வாழ்வர்
மற்றையோர் அவரிடம் அடி பட்டே சாவர்.

திருக்குறள் 3:

Gun என்ப யானை தொப்பையென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப போலீஸ் உயிர்க்கே.

மாண்புமிகு முதல்வர் மணிப்பயல்

பின்னங்கால் பிடரியில் பட ஆட்டோவின் பின்னால் மணிப்பயல் ஓடிகொண்டிருந்தான்.

பின்னால் குண்டுசவுரி தொந்தி குலுங்க ஓடி வந்து கொண்டிருந்தான்.

சட்டி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு ஆட்டோவில் போய்க்கொண்டு சிலர் நோட்டீசு விநியோகித்தனர்.
தேர்தல் முடிவதற்குள் யார் அதிகம் நோட்டீசு சேகரிப்பது என்பதில் மணிப்பயல் அண்டு குண்டுசவுரியின் முற்போக்கு டவுசர் அணிவோர் கூட்டணிக்கும் ஆறாம் வகுப்பில் படிக்கும் பக்கத்து தெரு ரவுடி ஒரப்படை செந்திலின் தலைமையிலான (ரவுடி என்றால் பட்டப்பெயர் இல்லாமலா) பிற்போக்கு பேண்ட் அணிவோர் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

ஒரப்படை செந்தில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் சமயம் ஒரு நாள் அம்மா சுட்ட ஒரப்படையை டவுசர் பையில் வைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்திருந்தான்.
புதிதாக அந்தப் பள்ளிக்கு வந்திருந்த தமிழ் வாத்தியார் பண்டைய தமிழர்களின் விருந்தோம்பல் குணத்தைப் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது அவரது உண்மையான குணத்தை அறியாத செந்தில் டவுசர் பையிலிருந்த தின்பண்டமான ஒரப்படையை தின்னும்போது அதைக்கண்ட தமிழ் வாத்தியார் குஸ்தி வாத்தியாராகி அவனது தொந்தியில் பல குத்துக்களை விட்டு பஞ்சர் ஆக்கினார்.
அன்று முதல் அவன் ஒரப்படை செந்தில் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டான். இதுவே அவனது பெயர் காரணமாகும்.

ஒரப்படை செந்தில் சண்டை வந்தால் எதிரியின் தொடையில் டவுசரை விலக்கி கையில் வைத்திருக்கும் பேனாவினால் ஓங்கி குத்தி விடுவான். குத்திய வேகத்தில் அந்த இடத்திலிருந்து மாயமாக மறைந்து விடுவான். அதன் பிறகு பள்ளிகூடத்திற்கு நான்கு நாட்கள் கழித்துதான் வருவான்.

தொடையினில் குத்திய புண் நான்கு நாளில் ஆறுமே

அதற்கு முன் அகப்பட்டால் நம் கதை நாறுமே.

என்ற புதுக்குறள் அவன் எழுதிய திருக்குறள்.

அவன் பேனா மற்றும் பென்சில்களை இது போன்ற அதிரடி தாக்குதல்களுக்கு மட்டுமே பயன் படுத்தி வந்தான். தப்பி தவறி அவற்றை பரிட்சை போன்ற வீணான செயல்களுக்கு பயன்படுத்துவதில்லை என்பதை தனது அயலுறவு கொள்கையாக வைத்திருந்தான். எனவே அவனுக்கு பேனா பக்கிரி என்ற பட்டமும் அவனால் பாதிக்கப்பட்ட தொடை கிழிந்தோர் மறுவாழ்வு கழகத்தினரால் வழங்கப்பட்டிருந்தது.

மணிப்பயலும் குண்டுசவுரியும் போட்டியில் வெற்றி பெற்றால் நூற்றியெட்டு மாங்காய் உடைப்பதாக (ஒண்டித்தோப்பு கிழவனின் மாந்தோப்பில் திருடி) தொந்திப்பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டனர்.
உடைத்து முடித்ததும் அவற்றை பொறுக்கியெடுத்து மாங்காய் ஊறுகாய் போட்டு தரும்படி வீட்டில் உள்ள கிழவியிடம் வேண்டிக்கொண்டனர்.

ஒரு நாள் ஒரப்படை செந்தில் ஆட்டோவில் நோட்டீசு விநியோகிப்பவருக்கு எலந்தப்பழம் லஞ்சமாக கொடுத்து பத்து நோட்டீசு வாங்கியதாக முற்போக்கு கூட்டணியின் ஒற்றர் படை தளபதி பத்துகாசு பரமசிவன் குண்டு சவுரியிடம் சொல்லிவிட்டான்.
கோபமடைந்த குண்டுசவுரி போட்டியில் ஊழல் நடைபெற்றதை கண்டித்து மறியல் போராட்டம் அறிவித்தான்.
இதனால் தெருவில் பம்பரம் மற்றும் கோலிக்குண்டு விளையாடிய சிறுவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ரவுடி ஒரப்படை மறியல் போராட்டத்தை கண்டித்து உண்னும் விரதம் அறிவித்தான்அதன்படி வழக்கமாக வீட்டில் ஐந்து தட்டு சோறு தின்பவன் அன்று எட்டு தட்டு சோறும் சாம்பார் குண்டானையும் காலி செய்தான்.
சாப்பாடு தீர்ந்து போன ஆத்திரத்தில் ஒரப்படை செந்திலின் அப்பா அவனது முதுகில் நான்கு கும்மாங்குத்துகளை விட்டு உண்னும் விரதத்தை முடித்து வைத்தார்.
இப்படியாக கலவரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தது.

ஒருநாள்….

மணிப்பயல் ஒரு மூத்திர சந்தின் வழியாக முறுக்கு தின்று கொண்டு வந்துகொண்டு இருந்தான். அப்போது திடீரென ஒரப்படை செந்தில் எதிரில் வந்து நின்றான். அவன் கையில் ஏதோ ஆயுதம் போன்று மறைத்து வைத்திருந்தான்.

அவனது கையில் வைத்திருந்த அந்த ஆயுதம் ஒரு பொட்டலத்தில் இருந்தது.

படாரென அந்த பொட்டலத்தைப்பிரித்தான் ஒரப்படை.
அதில் ஓட்டல் மரணபவனில் கி.மு வில் சுட்ட நான்கு போண்டாக்கள் இருந்தன.

‘என்னடா பாக்குற மணி? டேய்! உனக்குத்தான் திங்க தெரியுமா? நான் இப்ப எப்படி திங்கிறேன்னு பாருடா.’ என்று சவால் விட்டபடி ஒரு போண்டாவை எடுத்து தரையில் மண்ணில் போட்டு புரட்டி எடுத்து தின்றான்.

‘டேய் ஒரப்படை! நீ திங்கறதுல வேணுமின்னா என்னோட ஜெயிக்கலாம். தைரியம் இருந்தா எலக்ஷன்ல என்னோட போட்டி போட்டு ஜெயிச்சிக்காட்டுடா பாக்கலாம்.’

இருவரும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தனர்.

அதன்படி ‘அகில இந்திய நாதியற்றோர் மற்றும் பின்தங்கியோர் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை மணிப்பயல் ஆரம்பித்தான். அதில் தேர்வில் காப்பி அடிக்கவும் பிட் அடிக்கவும் உதவி கிடைக்காத நாதியற்றோரும் மற்றும் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்து கிடக்கும் பின்தங்கியோரும் கட்சி உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்; ஊருக்கு ஒதுக்குப்புறமாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூட்டம் சேர்க்கும் பொறுப்பாளராக உருண்டை உப்புளி நியமிக்கப்பட்டிருந்தான்.அதன்படி குச்சிமிட்டாய் மற்றும் குருவிரொட்டி வாங்கித்தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சிலரை கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தான்.

அங்கிருந்த குட்டிச்சுவற்றில் ஏறி நின்றுகொண்டு மணிப்பயல் பேச ஆரம்பித்தான்.

‘அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே மற்றும் டாஸ்மாக் சிறுகுடி மக்களே! தாய்மார்களே மற்றும் கணவனை கொடுமைப்படுத்தும் பேய்மார்களே! பல்செட்டை மாட்டிக்கொண்டு பலகாரம் தின்னும் கிழவிகளே! மற்றும் பக்கத்து வீட்டு ஃபிகரை சைட் அடிக்கும் தாத்தாக்களே! உங்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் அதாவது நான் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக அகில இந்திய நா.பி.கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளேன்.அதில் நாதியற்ற,சோற்றுக்கு வக்கற்ற,கொட்டாவி விடக்கூட அலுப்பு படும் சோம்பேறிகள் ஆகியோரை நம்பி இந்த கட்சியை ஆரம்பித்துள்ளேன்.

நான் ஆட்சிக்கு வந்தால் பள்ளிக்கூடங்கள் வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும். மற்ற 364 நாட்களும் விடுமுறை அறிவித்து சட்டம் இயற்றப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் ஒரே வகுப்பில் மூன்று வருடங்களுக்கு மேல் பெயிலாகி அஸ்திவாரத்தை ஆழமாக தோண்டி அமர்ந்திருக்கும் மாணவர்களின் மன உறுதியைப்பாராட்டி அவர்கள் அனைவருக்கும் எனது கையால் ஊக்கப்பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது அ.இ.நா.பி கழகத்தினை எதிர்க்கட்சியினர் சிலர் ஆயி நாய்ப்பீ கழகம் என தவறாக உச்சரித்து ஏளனம் செய்வதை வண்மையாகக்கண்டிக்கிறேன்.

மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியுனும் சிரித்த முகத்துடனும் வாழ்வதற்கு ‘சிரிப்பு மருந்து’ என்ற ஒரு சிறப்புத்திட்டம் அமல்படுத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

எனவே அன்பார்ந்த வாக்காளர்களே! நீங்கள் அனைவரும் வரும் தேர்தலில் நமது அ.இ.நா.பி கழகத்தின் சின்னமான சொம்பு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.’

தேர்தலில் மணிப்பயலின் நா.பி கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

குண்டுசவுரி மாடியில் காய்ந்து கொண்டிருந்த தனது தாத்தாவின் கோவணத்தை உருவிக்கொண்டு வந்து மணிப்பயலுக்கு போர்த்தி விட்டு
‘மாண்புமிகு முதல்வர் மணிப்பயலுக்கு இந்த பொன்னாடையை அணிவிக்கிறேன்’ என வாழ்த்தினான்.

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ‘சிரிப்பு மருந்து’ தயாரிக்க விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டான் மணிப்பயல்.

அதன்படி விஞ்ஞானிகள் பல நாட்கள் போராடி மைதா மாவு போன்றதொரு சிரிப்பு பவுடரை கண்டுபிடித்தனர்.

சிரிப்பு பவுடர் விஞ்ஞானிகளால் மூட்டை மூட்டையாக உற்பத்தி செய்யப்பட்டது.

பின்னர் ஒருநாள் விமானம் மூலமாக தரையில் நடமாடிய மக்கள் மீது அந்த சிரிப்பு பவுடர் தூவப்பட்டது.

அந்ந மாவு மேலே பட்டவுடன் மக்கள் அனைவரும் வாய்விட்டுச்சிரிக்க ஆரம்பித்தனர். பவுடர் அதிகமாக பட்ட சிலர் தரையில் உருண்டு புரண்டு சிரித்தனர்.

டி.வி சீரியல் பார்த்துக்கொண்டிருந்த கிழவிகள் சோகக்காட்சி ஓடினாலும் அதைப்பார்த்து சிரித்துக்கொண்டே மூக்கை சிந்தியபடி அழுதனர்.

ரவுடி ஒருவனை என்கவுண்டரில் சிரித்துக்கொண்டே போலீசார் சுட்டனர் அந்த ரவுடியும் சிரித்துக்கொண்டே ‘அய்யோ!’ என்று அலறியபடி செத்துபோனான்.

இப்படியாக முதல்வர் மணிப்பயல் அவர்கள் நாட்டுமக்களுக்காக பல சாதனைகள் செய்து சிறப்பான ஆட்சி செய்ததாக கி.பி 3009 ல் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன.

விரைவில் வெளிவர இருக்கும் எமது படைப்புகள் :

· மணிப்பயலும் மாட்டுப்பொங்கலும் – அதிரடி சிறுகதை

· மணிப்பயலும் சில மத்தாப்புகளும் – முழு நீள திகில் தொடர்கதை

· கோமதி பாட்டியின் காசி யாத்திரை – ஒரு அற்புத ஆன்மீகத்தொடர்

. சட்டி சுட்டதடா – பிச்சையெடுத்து கோடீஸ்வரனாக மாறிய அல்கேட்ஸ் என்கிற அழகேசனின் அசத்தலானசுயசரிதை தொடர்.

காதல் கவிதைகள்

– எழுதியவர் புகழ் பெற்ற கவிஞர் குசும்பு குண்டுமணி

(இவருக்குபுகழேந்தி என்ற மகன் உள்ளான்.
மற்றபடி இவரை பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட தெரியாது)

பொங்கல் பரிசு

போன மாதம் செய்த பொங்கலை
பொட்டலமாய் கட்டி வந்து
உனக்காக நானே சுடச்சுட செய்தது என்று
தின்னச் சொன்னாள் என் கையில் தந்து

தின்னவுடன்—-

பட்டாசு சத்தம்தான் வயிற்றுக்குள் கேட்குதடி
போனேன் நொந்து
கக்கூசு கட்டணத்தில் கடனாளியானேனே
காலரா வந்து.

பஜ்ஜி – குச்சி

குவளை நிறைய இட்லியை
அவள் தொட்டுத் தின்றாள் சட்டினியில்

அவளை எண்ணி சாப்பிடாமல்
உடல் மெலிந்தேன் – நான் பட்டினியில்

தின்று தின்று உப்பினாளே -அவள்
எண்ணையில் நனைந்த பஜ்ஜி போல

வேதனையில் நான் இளைத்தேன்
வெயிலில் காய்ந்த குச்சி போல.

காரு – சோறு

கனவினிலே வாங்கி வந்தேன்
காதலிக்கு ஏசி காரு

கண்விழித்துச் சாப்பிட்டேன்
குண்டானில் பழைய சோறு

கட்டுரை பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை

 தமிழ் வினாத்தாள்களில் கட்டுரை  வரைக என பல தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும்.

இதற்கு நிறைய மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதால் இவை மாணவர்களின் தலையெழுத்தை மாற்றி விடும் அபாயம் உண்டு.

எனது நண்பன் அசோகன் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பற்றி கீழ்க்கண்டவாறு கட்டுரை எழுதினான்:

மாமல்லபுரத்துச் சிற்பங்கள் மாமல்லபுரத்தில் உள்ளன.
அவை கருங்கல்லினால் ஆனவை.
உளி வைத்துச்செதுக்கப்பட்டவை.
கொத்தனாரால் கட்டப்பட்;டவை என கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இவனது விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கோபத்தில் மைனஸ் நூறு மதிப்பெண்கள் போட்டு விட்டார். இதனால் தேர்வில் தோல்வி அடைந்த அசோகன் மாமல்லபுரத்தில் உள்ள தனது மாமா வைத்திருக்கும் டீ கடையில் வேலை செய்வதாக சமீபத்தில் கேள்விப் பட்டேன்.
கோவிந்தசாமி கடல் சிங்கங்கள் பற்றிய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தான்:

கடல் சிங்கங்கள் கடலில் குட்டி போட்டு காட்டில் இடம்பெயர்ந்து  கூட்டமாக வாழும்.

தங்கதுரை முப்பால் பற்றிய கட்டுரையில் இவ்வாறு எழுதினான்:

பால் மூன்று வகைப்படும். அவையாவன:

1. ஆட்டுப்பால்
2. மாட்டுப்பால்
3. நாய்ப்பால்.

ஆட்டுப்பால் காய்ச்ச வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். மாட்டுப்பால் சுட வைத்து குடிக்க வேண்டும். நாய்ப்பால் உடலுக்கு தீங்கானது. ஆடடுப்பால் குடித்தால் இறைப்பு வரும். நாய்ப்பால் குடித்தால் குறைப்பு வரும்.

இப்படியாக கட்டுரையில் கட்டுக்கதைகள் எழுதியவர்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதலாம்.

காந்தி பற்றி கட்டுரை வரைக.
இப்படி ஒரு கேள்வி  நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது தமிழ் ஆண்டுத்தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிந்தது.
பதற்றத்தில் காந்தி என்பதை தொந்தி என தவறாக புரிந்து கொண்டு நான் கீழ்க்கண்டவாறு எழுதித் தொலைத்து விட்டேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால் என் பின்னால் அமர்ந்து தேர்வு எழுதிய எனது நண்பன் குண்டு சவுரி எனது இந்த கட்டுரையை அப்படியே காப்பி அடித்து மாட்டிக்கொண்டான்.
தொந்தி – ஒரு ஆய்வு கட்டுரை
காயமே இது பொய்யடா
இது வெறும் காற்றடைத்த பையடா

இது யாரோ ஒரு சினிமா பாடலாசிரியர் எழுதிய பாடல் அல்ல.இந்த அற்புத வரிகள் ஒரு சித்தரின் சிந்தனையில் உருவானவை.

காயம் என்றால் உடல் என்று பொருள்.

பழங்கால சித்த வைத்தியர் மந்திவாயனார் தனது ஒலைச்சுவடியில் இப்படி   குறிப்பிடுகிறார்:

காயத்தில் காயம் ஏற்படின்
காயத்தில் காயத்தை வைத்து கட்டு.

அதாவது

காயத்தில்(உடலில்)
காயம்(புண்) ஏற்படின்
காயத்தில்(புண்ணில்)
காயத்தை(பெருங்காயத்தை) வைத்து கட்டு.
 என்பது பொருள்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நம் உடலில் உள்ள பாகங்களில் மிகவும் அழகானது எது என்று கேட்டால் அனைவரும் உடனே சொல்வது நமது முகம் என்று.சிலர் கண்கள் என்பர்

உண்மையிலேயே நமது மேனி அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது எது தெரியுமா? நிச்சயமாக நமது தொந்திதான். ஏன் ஆச்சரியமாக இருக்கிறதா?

ஒரு பழமொழி உண்டு.

 எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்று.

சிரசு என்றால் தலை என்று பொருள்.

இது மிகவும் தவறான பழமொழியாகும்.

உண்மை என்னவெனில்

எண்சான் உடம்பிற்கு தொந்தியே பிரதானமாகும்.

இதனை ஒரு சிறிய ஆய்வின் மூலம் நீங்கள் அறியலாம்.

1. ஓரு அறையில் சுவரின் முன்னால் நிற்கவும்

2. முதலில் நீங்கள் நேராக நிற்கவும்.

3. கண்ணை மூடிக்கொள்ளவும்.

4. அப்படியே மெதுவாக நடந்து செல்லவும்.

5. சிறிது தூரம் நடந்து சென்றவுடன் சுவரில் மோதி நிற்பீர்கள்.

6. அப்படியே மெதுவாக கண்களை திறந்து பார்க்கவும்.

7. உங்கள் உடலின் எந்த பாகம் சுவரில் மோதி நிற்கிறது?

நிச்சமாக தொந்தியாகத்தான் இருக்கும்.

நமது கடவுள்களில் மிகவும் அழகானவர் தொந்தியுடைய பிள்ளையார்தான். நமது நாடு மட்டுமல்ல. வெளிநாட்டினரின் மனதை கொள்ளை கொண்டதும் பிள்ளையாரின் உருவம்தான். அதனாலேயே பல பிள்ளையார் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்படுகின்றன.
 காரணம் அவரது அழகான தொந்தி.

இந்திய மாநிலங்களில் மிகப்பெரியது மத்தியபிரதேசம் என்பதை அனைவரும் அறிவோம். அதுபோலவே நமது உடலின் மத்தியப்பிரதேசமான தொந்தியே உடலின் மிகப்பெரிய பாகமாகும்.

பந்திக்கு முந்திக்கொள்
தொந்தியை வளர்த்துக்கொள்.

பந்தியில்
குந்தி தின்றால்
தொந்தி வளரும்.

போன்ற பழமொழிகள் நமது முன்னோர்கள் தொந்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பறை சாற்றும்.

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது.உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப்பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

 பாடலாசிரியர் வைரமுத்து கூட

நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர்; குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப்போலவே உருண்டை வடிவமானது.
இந்த வாழ்க்கையும் வட்டவடிவமானது.
 இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப்போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்

போற்றி வளர்ப்போம் ! கண்டதையும் போட்டு வளர்ப்போம் !!

ஜெய் தொந்தி!